நவோதயா பள்ளிகளுக்கு தமிழக அரசு எதிர்ப்பு.. திமுக அரசின் சாதனையை சொல்லி சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட்

  • டெல்லி: நவோதயா பள்ளிகள் நிறுவ தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் நவோதயா பள்ளிக்கு எதிரான வழக்கில் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு உச்ச நீதிமன்றத்தில் தவெக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்​ளி​களை நிறு​வுவது குறித்த நிலைப்​பாடு என்ன என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    Advertisement

    கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் இலவச உண்டு, உறைவிட பள்ளியாக நவோதயா பள்ளிகள் உள்ளன. மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் இந்த பள்ளிகளுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில், மாவட்டம் தோறும் 'ஜவஹர் நவோதயா வித்​யால​யா பள்​ளி'யை நிறுவ அனு​ம​திப்​பது தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    திமுக அரசின் சாதனைகளை சொல்லி

    அப்போது, நவோதயா பள்​ளி​களை நிறு​வுவது குறித்த நிலைப்​பாடு குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் மற்றும் நிலங்​களை அடை​யாளம் காண்​பது குறித்தும் மூன்று வாரத்திற்குள் தனது பதிலை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

    உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நவதோயா பள்ளிகள் விவகாரத்தில், தமிழக அரசு சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நவோதயா பள்ளிகள் நிறுவ தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் நவோதயா பள்ளிக்கு எதிரான வழக்கில் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு தவெக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    Advertisement

    நவோதயா பள்ளி செயல்படுத்த முடியாது

    2021 முதல் 2026 வரை அரசு பள்ளிகளில் படித்த 1912 மாணவர்கள் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் கல்வி கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. கல்வி என்பது அரசியலமைப்பின் படி பொதுப் பட்டியலில் வருகிறது. எனவே கொள்கைளை வகுக்கவும், சட்டங்களை இயற்றவும் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சியின் போது தமிழக அரசு தமிழ் கற்றல் சட்டம் இயற்றியது.

    இந்த சட்டத்தின் கீழ், அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியானது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் சொந்த சட்டங்களுக்கு முரணாக இருக்கும் மத்திய அரசின் நிர்வாக கொள்கைகளை செயல்படுத்த முடியாது. எனவே, நவோதயா பள்ளிகளை அமைக்குமாறு கட்டாயப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. நவோதயா பள்​ளி​களுக்கு நிலத்தை அடை​யாளம் காண வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்​பர் மாதம் பிறப்​பித்த உத்​தரவை உச்ச நீதி​மன்​றம் திரும்பப் பெற வேண்​டும்​' என்று தமிழக அரசின் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    நயினார் நாகேந்திரன் கடும் எதிர்ப்பு

    நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- "தமிழகத்தைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா பள்ளிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.

    ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உயர் தரமான சிபிஎஸ்இ கல்வியை முற்றிலும் இலவசமாக வழங்கும் நவோதயா பள்ளிகளைத் தடுக்கும் நோக்கில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. நவோதயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தங்குமிடம், சத்தான உணவு, சீருடை மற்றும் புத்தகங்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

    Advertisement

    அரசியல் செய்யாதீங்க

    அத்தகைய பள்ளிகளைத் தடுப்பதன் மூலம், தவெக அரசு திமுகவின் அதே மாணவர் விரோதப் பாதையையே பின்பற்றி, அதன் 'பி-டீமாக' செயல்படுவது ஏமாற்றமளிக்கிறது. எனவே, மாநில உரிமை என்ற பெயரில் அரசியல் செய்யாமல், மாணவர் நலனைக் கருதி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நவோதயா பள்ளிகளுக்குத் தேவையான நிலங்களைத் தவெக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் இந்தப் பிடிவாதப் போக்கை அரசு கைவிடாவிட்டால், பாரதிய ஜனதா கட்சி மாணவர்களுக்காகத் தொடர்ந்து வீதிக்கு வந்து போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்"என்று கூறியுள்ளார்.

    English Summary

    Tamil Nadu government has expressed strong opposition to the establishment of Navodaya schools. Furthermore, the government has filed an affidavit in the Supreme Court regarding the case against these schools, listing the achievements of the DMK administration. This move follows the Supreme Court's directive requiring the state government to clarify its stance on setting up Navodaya schools in Tamil Nadu.