கரூர்: அரசு பணி என்பது கொள்கை முடிவு.. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்ற தமிழக அரசு!

  • டெல்லி: கரூர் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில், அரசுப்பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இதை உயர்நீதிமன்ற மதுரை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, ரத்து உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.

    Advertisement

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றிருந்த அரசியல் பரப்புரை நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    Advertisement

    விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நெரிசலில் பலியானவர்களில் 31 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த 10ம் தேதி நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று அரசு பணிக்கான ஆணையை அவர் வழங்கியிருந்தார். ஆனால், இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக தவெக ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட.. எதிர்ப்பு தெரிவித்தன. அரசு வேலையை தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த கூடாது என்று விமர்சனங்கள் எழுந்தன.

    மறுபுறம் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என்று கூறி, பணி ஆணையை ரத்து செய்தது.

    Advertisement

    இது தவெக அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. எனவே உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தனது மேல்முறையீட்டு மனுவில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

    English Summary

    Karur Stampede Victims' Jobs: The Tamil Nadu government had issued government job orders to the victims of the Karur stampede incident; however, the Madurai Bench of the High Court quashed this decision. Contending that the court cannot interfere in government policy decisions, the Tamil Nadu government has now filed an appeal in the Supreme Court against the quashing order.