எங்களை கேட்காமல் எப்படி முடிவெடுக்கலாம்? டாடா சன்ஸ் vs டாடா டிரஸ்ட்.. உள்ளே வெடிக்கும் பெரிய மோதல்

  • டெல்லி: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனை மீண்டும் நியமித்த விவகாரத்தில் ஏற்பட்ட மோதல், தற்போது டாடா டிரஸ்ட்ஸ் அமைப்புக்குள்ளேயே புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சந்திரசேகரனின் மறுநியமனத்தை டாடா சன்ஸ் வாரியம் அங்கீகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கிடையே டாடா டிரஸ்டின் இரண்டு முக்கிய அறங்காவலர்களும் இப்போது இது தொடர்பாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

    Advertisement

    கடந்த சில மாதங்களாகவே டாடா டிரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனங்களில் நடக்கும் விஷயங்கள் தேசியளவில் பேசுபொருளாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை அதிகரித்தே வருகிறது. டாடா நிறுவனங்களில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு மோதல் வெடித்துள்ளது.

    Advertisement

    டாடா

    டாடா சன்ஸை மறுசீரமைக்கும் திட்டத்துக்கு டிரஸ்ட்ஸ் ஆதரவு தெரிவித்த விதம் குறித்தே சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட்டின் துணை தலைவர்களும் அறங்காவலர்களுமான வேணு சீனிவாசன் மற்றும் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளனர்.. செப்டம்பர் 28ம் தேதி முன்வைக்கப்பட்ட இந்த திட்டம், டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டிய கட்டாயத்தை தவிர்ப்பதற்கான மாற்று வழியாக முன்வைக்கப்பட்டுள்ளது.

    இந்த மறுசீரமைப்பு திட்டம் டாடா சன்ஸ் வாரியத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட்டின் கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் தங்களிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை என்றும் வேணு சீனிவாசனும் விஜய் சிங்கும் சக அறங்காவலர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், திட்டம் தொடர்பான அறிக்கையையும் தாங்கள் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே, அறங்காவலர்கள் முறையாக அங்கீகரிக்காத நிலையில், அந்த கடிதமும் அறிக்கையும் டிரஸ்ட்டின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக எப்படி கருதப்பட முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    Advertisement

    டாடா சன்ஸ்

    டாடா சன்ஸ் வாரியத்திடம் மறுசீரமைப்பை அங்கீகரிக்க கோருவதற்கு பதிலாக, அந்த திட்டத்தை பரிசீலனைக்காக மட்டுமே முன்வைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது தங்களிடம் ஒப்புதல் பெறாமல் வெறுமன ஆலோசனை மட்டும் கேட்கப்பட்டதாக கூறியுள்ளனர். மேலும், இத்தகைய பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஏற்படும் சட்ட, நிதி, வர்த்தக மற்றும் ஒழுங்குமுறை விவகாரத்தை டாடா சன்ஸ் வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே அவர்களின் வாதம்.

    டாடாவின் அனைத்து நிறுவனங்களுக்கும் தாய் நிறுவனம் டாடா சன்ஸ் தான். அந்த டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 66% பங்குகளை டாடா டிரஸ்ட்ஸ் வைத்துள்ளது. எனவே, டாடா டிரஸ்ட்ஸ் எடுக்கும் நிலைப்பாடு தான் டாடா சன்ஸின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கியமானது. தற்போது டாடா சன்ஸ் உயர் அடுக்கு என்பிஎஃப்சி ஆக இருப்பதால் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கவே டாடா சன்ஸ் மறுசீரமைப்பு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மோதல்

    சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிக்க செப்டம்பர் 17ம் தேதி டாடா சன்ஸ் வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்த முடிவை நோயல் டாடா எதிர்த்த நிலையில், வேணு சீனிவாசன் ஆதரவாக வாக்களித்தார். இருப்பினும், டாடா டிரஸ்ட் உறுப்பினர்கள் இருவருமே ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே நியமனம் செல்லுபடியாகும் என்று டாடா டிரஸ்ட் கூறுகிறது. ஆனால், இதை டாடா சன்ஸ் ஏற்கவில்லை.

    இதற்கிடையே சந்திரசேகரனின் மனைவி லலிதா மற்றும் மகன் பிரணவுடன் தொடர்புடைய ஹன்னோ ஒன் வேர் ஹவுசிங் நிறுவனம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் டிவிஎஸ் மோட்டார் தொடர்பான திட்டங்களில் ஈடுபட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. அதாவது சந்திரசேகரன் பதவி நியமனத்திற்கு ஆதரவாக வாக்களித்த டிவிஎஸ் நிறுவனத்தின் திட்டங்களில் அவரது மனைவியும் மகனும் ஈடுபட்டுள்ளனர் என்பதே பேசுபொருளாகியுள்ளது.

    Advertisement

    சர்ச்சை

    வேணு சீனிவாசன் டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் எமிரிட்டஸாக இருப்பதுடன், டாடா சன்ஸ் வாரியத்தில் டாடா டிரஸ்ட்ஸின் நியமன உறுப்பினராகவும் உள்ளார். எனினும், இந்த வர்த்தக உறவை மட்டுமே வைத்து கொண்டு அவரது வாக்கை செல்லாத ஒன்றாக மாற்றிவிட முடியாது. இருப்பினும், சட்ட ரீதியாக அதில் சிக்கல் வராது எனவும் புறந்தள்ளிவிட முடியாது.

    இப்போது டாடா சன்ஸின் மறுசீரமைப்பு திட்டத்தை வாரியம் ஏற்குமா, அந்த விவகாரத்தில் ஆர்பிஐ என்ன நிலைப்பாடு எடுக்கும், டாடா டிரஸ்ட்ஸ் இறுதி முடிவு என்ன என பல கேள்விகள் எழுந்துள்ளது. சந்திரசேகரனின் மறுநியமன விவகாரத்தில் தொடங்கிய மோதல், தற்போது டாடா டிரஸ்ட்ஸின் நிர்வாகம், அதன் அதிகார வரம்பு மற்றும் டாடா சன்ஸ் மீதான அதன் கண்ட்ரோல் என பெரிய விவாதமாக மாறியுள்ளது.

    English Summary

    A fresh dispute has emerged within Tata Trusts over the restructuring plan for Tata Sons and the reappointment of N. Chandrasekaran(டாடா சன்ஸ் நிறுவனத்தில் உச்சக்கட்ட மோதல்): Tata Trusts Row Escalates latest news in tamil.