டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை தொடர்ந்து நேற்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தான் போராட்டம் முடிந்த கையோடு இன்று காலையில் அபிஜித் திப்கே புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னை மன்னித்துவிடுங்கள். இது வெறும் தொடக்கம் மட்டும் தான் என்று கூறியுள்ளார். அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது:
''அனைவருக்கும் காலை வணக்கம். இன்றைய நாள் ரொம்ப நன்றாக உள்ளது. அடுத்து என்ன செய்வது? என்பது பற்றிய எந்த சிந்தனையும் இன்றி இன்று நான் இருக்கிறேன். பயம், பதற்றம் எதுவும் இல்லை.
கடந்த 37 நாட்கள் என்பது உண்மையிலேயே ரொம்ப கடினமானதாக இருந்தது. இது சாதாரணமானதாக இல்லை. இது எனக்கு மட்டுமில்லை. நம்முடைய டீமில் உள்ள அனைவரும் இந்த கடினமான சூழலை எதிர்கொண்டோம். இந்த நேரத்தில் நமக்கு ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியில் இந்தியா முழுவதும் இருப்போருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன. 37 நாட்களாக ஜந்தர் மந்தரில் காத்திருந்து போராட்டம் நடத்திய மக்கள் அனைவருக்கும் நான் இதயத்தில் இருந்து நன்றி கூறி கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டிற்காக நீங்கள் செய்ததை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த சமயத்தில் நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஏனென்றால் போராட்டத்தின் இறுதி நாட்களில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தேன். இதனால் போராட்டம் முடிவடைந்த பிறகு நேரில் அனைவருக்கும் என்னால் நன்றி சொல்ல முடியவில்லை. இதனால் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும், போராட்டத்தை விமர்சனம் செய்தவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு விமர்சனங்களும் தான் போராட்டத்தை மேம்படுத்த உதவியது. இது வெறும் ஆரம்பம் தான். கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு இன்னும் நீண்ட நெடிய பயணம் உள்ளது'' என்று கூறியுள்ளார்.