UGC NET தேர்வில் ஏகப்பட்ட பிழை.. 3 பாடங்களுக்கு மறுதேர்வு.. NTA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

  • டெல்லி: கடந்த ஜூன் மாதம் நடந்த யுஜிசி-நெட் தேர்வில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய 3 பாடங்களுக்கான கேள்வித்தாள்களில் பல்வேறு பிழைகள் இருந்ததாக எழுந்த புகார்கள் எழுந்தன. இதையடுத்து அந்த பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இந்த 3 பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    கடந்த ஜூன் மாதம் யுஜிசி நெட் (UGC-NET) தேர்வு நடைபெற்றது. கடந்த ஜூன் 22 முதல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் 87 பாடங்களுக்கு நடத்தப்பட்டது. ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப், உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி மற்றும் பிஎச்டி சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் நாடு முழுக்க இருந்து பலர் தேர்வு எழுதினர்.

    Advertisement

    பிழைகள்

    இருப்பினும், இதில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து, அந்தப் புகார்களை ஆய்வு செய்ய என்டிஏ சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு மேற்கொண்ட ஆய்வில், மூன்று கேள்வித்தாள்களிலும் எழுத்துப்பிழை மற்றும் மொழிபெயர்ப்பு தொடர்பான பல்வேறு பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டதாக என்டிஏ தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, முக்கிய அறிஞர்களின் பெயர்கள் தவறாக குறிப்பிடப்படுவது, புத்தகங்களின் தலைப்புகள் குளறுபடியாக இருப்பது, கேள்விகளின் வாக்கிய அமைப்பில் பிழைகள், இலக்கண பிழைகள், தகவல் பிழைகள் போன்ற பல்வேறு பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டதாக என்டிஏ கூறியுள்ளது. மேலும், ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளில் இடம்பெற்றிருந்த கேள்விகளே கணிசமான அளவுக்கு இந்த வினாத்தாளில் இடம்பெற்றிருந்ததும் தெரியவந்துள்ளது.

    Advertisement

    மறுதேர்வு

    இவ்வளவு பிழைகள் இருப்பதால்.. சம்பந்தப்பட்ட கேள்விகளை நீக்குவது அல்லது அதற்கு மாற்று மதிப்பெண் வழங்குவது மட்டும் பிரச்சினையை தீர்க்க முடியாது என குழு தெரிவித்துள்ளது. எனவே, 3 பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல் ஆகிய தேர்வுகளுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அட்டவணை

    ஆங்கில பாடத்திற்கு வரும் செப்டம்பர் 9ம் தேதி காலை 9 மணி - மதியம் 12 மணி, வணிகவியல் பாடத்திற்கு அதே செப்டம்பர் 9ம் தேதி மதியம் 3 மணி - மாலை 6 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சமூகவியல் பாடத்திற்கு வரும் செப்டம்பர் 10ம் தேதி காலை 9 மணி - மதியம் 12 மணி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தேர்வு கட்டணம் இல்லை

    இந்த 3 பாடங்களில் மறுதேர்வு எழுதும் தேர்வர்களிடம் கூடுதல் தேர்வுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.. மறுதேர்வுக்கான தேர்வு மையம் மற்றும் புதிய அட்மிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.. மேலும், இந்த 3 பாடங்களுக்கு மறுதேர்வு நடத்துவதால் மற்ற 84 பாடங்களின் தேர்வு முடிவுகள் தாமதமாகாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    மேலும், அந்த 84 பாடங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கான JRF இட ஒதுக்கீடு, உதவி பேராசிரியர் மற்றும் பிஎச்டி சேர்க்கைக்கான இ-சான்றிதழ்கள் வழங்குவதிலும் தாமதம் ஏற்படாது என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    National Testing Agency has announced a UGC NET re-exam for English, Commerce and Sociology(யுஜிசி நெட் மறுதேர்வு அறிவிப்பு): UGC NET Re-Exam latest news in tamil.