வினாத்தாளை கசியவிட்டால் ரூ.10 கோடி அபராதம், 10 ஆண்டு சிறை.. மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

  • டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்வுத்தாள் கசிவுகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று 35வது நாளாக மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் நீடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    Advertisement

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றறது. நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க, கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய வரைவுச் சட்டம் குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்" என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீட் வினாத்தாள் கசிவு குறித்து முக்கிய ஆலோசனை நடந்தது. கேபினட் கூட்டத்தில் தேர்வு முறைகேடுகளை தடுக்க சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க, சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரித்து 3 மாதங்களுக்குள் தண்டனை, குற்றவாளிகளுக்கு ரூ.10 கோடி அபராதம், குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்வு முறைகேடுகளை தடுக்க பொதுத் தேர்வுகள் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டம், 2024-இல் திருத்தங்களை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    மேலும், மாணவர்கள் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் திங்கள்கிழமையே (ஜூலை 27) இந்த சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "மசோதாவை சமர்ப்பிக்கத் தயாராகி வருகிறோம். அமைச்சரவை முடிவு குறித்து விளக்கம் அளிக்கப்படும். மாணவர்கள் நலன் சார்ந்த மசோதாவை நிறைவேற்றுவதில் எந்த தாமதமும் இருக்கக் கூடாது என்று பிரதமர் கூறியுள்ளார். அதையே நாட்டு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். அதனை தடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் எந்தவொரு உத்தியையும் கையாள்வது சரியல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

    டெல்லி வட்டார தகவல்களின்படி, முழு அமைச்சரவையும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு ஆதரவாக நிற்கிறது என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அரசு ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை என்றும் தெரிகிறது.

    English Summary

    Union Cabinet chaired by the prime minister Narendra Modi approved a draft bill to ensure stricter punishments for paper leaks, including a fine of up to Rs 10 crore.