நிர்மலா சீதாராமனிடம் நிதித்துறை பறிப்பு? மாஜி RBI ஆளுநருக்கு லக்? மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்

  • டெல்லி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடுத்தடுத்து ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து பேசி உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த அமைச்சரவை மாற்றம் எப்போது இருக்கும்? எப்படி இருக்கும்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அந்த பதவி பறிக்கப்பட்டு புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தற்போது நம் நாட்டில் 'டாக் ஆப் தி' டவுன் ஆக இருப்பது மத்திய அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்தி தான். கடந்த சில வாரங்களாகவே மத்திய அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திகள் வெளியாகி வந்தாலும் கூட தற்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    Advertisement

    குறிப்பாக கடந்த 22 ம் தேதி பிரதமர் மோடி ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து பேசினார். அதன்பிறகு நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து பேசினர்.

    இந்த வேளையில் மத்திய அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மோடி, அமித்ஷா ஆகியோர் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் விவாதித்ததாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்களுக்கு, ஜனாதிபதி திரெளபதி முர்மு தான் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்பதால் மோடி, அமித்ஷா ஆகியோர் முன்கூட்டியே சந்திப்பு நடத்தி அனுமதி கோரியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் மத்திய அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    அதன்படி மத்திய அமைச்சரவை மாற்றம் என்பது வரும் 28ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அல்லது 29ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது. இதில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. நிதித்துறைக்கு பதில் நிர்மலா சீதாராமனுக்கு மனிதவள மேம்பாட்டு துறை (HRD) வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதேபோல் நிர்மலா சீதாராமனுக்கு பதில் நிதித்துறை என்பது முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வசம் ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர் தமிழ்நாடு தமிழ்நாடு கேடரை சேர்ந்த 1980ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்தவர். இவர் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்தார். பிறகு மத்திய அரசு பணிக்கு சென்று சென்றார். நிதித்துறையின் மற்றும் பொருளாதார விவகாரத்துறையின் சிறப்பு செயலாளராகவும், செலவு துறையின் இணை செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். குறிப்பாக மறைந்த பாஜக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன் நெருக்கமாக செயல்பட்டார். இவர் கடந்த 2018 ம் ஆண்டு ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமனம் செய்ப்பட்டார். 3 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்தார்.

    Advertisement

    இவர் தற்போது பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் -II ஆக செயல்பட்டு வருகிறார். நிதித்துறையில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட இவரை மத்திய நிதி அமைச்சராக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் நிதி அமைச்சராக்கப்படும்போது அடுத்த 6 மாதத்தில் ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து பாஜகவில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்படுவார்.

    மேலும் பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியை பாஜகவிற்கு விட்டுகொடுத்த ராஜ்யசபா எம்பியாகி உள்ளார். இதனால் அவருக்கும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது அதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு மீண்டும் இடம் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    இவர்கள் தவிர மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் அமைச்சராக இருக்கும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் பதவி இழக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்சனையால் தர்மேந்திர பிரதானிடம் அந்த பதவி பறிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் ஈரான் போருக்கு மத்தியில் கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாடு சார்ந்த பிரச்சனையை இந்தியா சமாளித்தாலும் கூட அந்த விஷயத்தில் ஹர்தீப் சிங் பூரியின் செயல்பாடு பிரதமர் மோடிக்கு திருப்தியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    அதேபோல் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவை சேர்ந்த எம்பிக்களுக்கு கூடுதலாக மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம். ஏனென்றால் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) அணியை சேர்ந்த 6 எம்பிக்களை பிரித்து பாஜக கூட்டணிக்கு ஆதரவாக கொண்டு வந்ததற்கு நன்றி கடனாக இதனை பிரதமர் மோடி செய்யலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்பிக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

    மேலும் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து 7 ராஜ்யசபா எம்பிக்கள் சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர். இதில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம். ராகவ் சதா அல்லது அசோக் மிட்டல் ஆகியோரில் ஒருவர் அமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பாஜகவிற்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும். இதனால் அந்த தேர்தலை மையப்படுத்தி உத்தர பிரதேசத்தை சேர்ந்த எம்பிக்களுக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கலாம். குறிப்பாக பலரும் மத்திய இணையமைச்சராக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் மத்திய அமைச்சரவை மாற்றம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Union Cabinet Reshuffle: Reports indicate that a reshuffle of the Union Cabinet, led by Prime Minister Narendra Modi, is imminent. Amidst news that Prime Minister Modi and Union Home Minister Amit Shah have held separate meetings with President Droupadi Murmu regarding this matter, there is considerable speculation about the timing and nature of the reshuffle. Notably, reports suggest that Union Finance Minister Nirmala Sitharaman may be relieved of her current portfolio and assigned a new responsibility.