டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜேபி நட்டா டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 'ஆஞ்சியோகிராம்' பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் ஜேபி நட்டா தற்போது ராஜ்யசபா எம்பியாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் உள்ளார். இவர் தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்று வந்தார். நேற்று மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்தது. இந்நிலையில் தான் நேற்று மாலையில் திடீரென்று ஜேபி நட்டாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் இருந்து அவர் அசவுகரியத்தை உணர்ந்தார். உடனடியாக ஜேபி நட்டா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டார். ஜேபி நட்டாவிற்கு இதயம் சார்ந்து அசவுகரியத்தை நேற்று உணர்ந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே தான் ஜேபி நட்டாவிற்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் 'ஆஞ்சியோகிராம்' பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை இன்று எய்ம்ஸ் மருத்துவமனை உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜேபி நட்டாவிற்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் என்பது இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏதேனும் உள்ளதா? இல்லையா? என்பதை கண்டறியும் பரிசோதனையாகும். இந்த பரிசோதனையில் இதயக்குழாயில் எத்தனை இடங்களில் அடைப்பு உள்ளது? என்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ஏற்ப சிகிச்சைகள் வழங்கப்படும். இருப்பினும் அதுபற்றி எந்த விஷயங்களையும் எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதில், ''உடல் நலக்குறைவு காரணமாக மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 'கரோனரி ஆஞ்சியோகிராபி' (ஆஞ்சியோகிராம்) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயவியல் பிரிவில் கண்காணிப்பில் உள்ளார்'' என்று கூறப்பட்டுள்ளது.