2 வாரங்கள் தான் டைம்.. UPIக்கு வரப்போகுது தனி கட்டணம்.. யாருக்கு பொருந்தும்.. எவ்வளவு கட்டணம்?

  • டெல்லி: இந்தியாவில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் போது அதற்கு கட்டணம் வசூலிக்கும் முறை விரைவில் கொண்டு வரப்படலாம் என சில காலமாகவே தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே ரூ.2,000க்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.3% கட்டணம் விதிக்கப்படலாம் என்றும் இதற்கான அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    யுபிஐ கட்டணம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் யுபிஐ கட்டணங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. முதலில் எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கக் கூடாது என்பது குறித்து தெளிவான அறிவிப்பை நிதி சேவைகள் துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் யுபிஐ கட்டணம், வரம்பு மற்றும் நடைமுறை குறித்த அறிவிப்புகளை யுபிஐ கமிட்டி இறுதி செய்யும்.

    Advertisement

    MDR என்றால் என்ன?

    MDR என்பது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஏற்று கொள்ளும் வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை வங்கிகள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்கு செலுத்தும் கட்டணமாகும். முக்கியமாக, இந்த கட்டணம் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக வசூலிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகள் நுகர்வோருக்கு தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என நாடாளுமன்றத்திலேயே மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

    2019 டிசம்பர் வரை ரூ.2,000க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக 0.3% MDR இருந்தது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் 2020 ஜனவரி முதல் MDR நீக்கப்பட்டது. இதற்குப் பதிலாக யுபிஐ கட்டமைப்பில் உள்ள நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. ஆனால் கொரோனா காலத்துக்கு பிறகு யுபிஐ பயன்பாடு மிக பெரிய அளவில் அதிகரித்ததால், பேமெண்ட் கட்டமைப்பில் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் முதலீடும் அதிகரித்தது. இதனால் MDRஐ மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    Advertisement

    கிரெடிட் கார்டை விட குறைவு

    மீண்டும் 0.3% MDR அறிமுகப்படுத்தப்பட்டாலும், இது கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணத்தை விட குறைவு. இப்போது கிரெடிட் கார்டுகளுக்கு 1-3% வரை MDR வசூலிக்கப்படும் நிலையில், அதைவிட யுபிஐக்கான கட்டணம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. டெபிட் கார்டுகளும் கூட 0.9% வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அதை விட குறைவாக 0.3% கட்டணம் மட்டுமே யுபிஐக்கு வசூலிக்கப்படவுள்ளது.

    யுபிஐ தான் இப்போது உலகின் மிக பெரிய ஆன்லைன் பண பரிவர்த்தனை அமைப்பாக உள்ளது. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 85% யுபிஐ மூலமாகவே நடைபெற்றது. அந்த ஆண்டில் மட்டும் 241.62 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் ரூ.314.23 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

    Advertisement

    ஏன் தேவை?

    யுபிஐ அமைப்பை பராமரிக்கவும் கட்டணங்களை செயல்படுத்தவும் செலவாகிறது. அதற்கு அரசு ஊக்கத்தொகை கொடுத்தாலும் கூட செலவு அதைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதாக நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 2026-27 பட்ஜெட்டில் யுபிஐ தொடர்பான ஊக்கத்தொகைக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்துறையின் மதிப்பீட்டின்படி யுபிஐ இயக்க செலவு சுமார் ரூ.20,700 கோடி என கூறப்படுகிறது. அதாவது ஊக்கத்தொகையை விட செலவு 10 மடங்கு அதிகமாகிறது.

    அடுத்து என்ன

    இவ்வளவு அதிக தொகையை அரசால் கொடுக்க முடியாது என்பதாலேயே மீண்டும் MDR வருகிறது. படிப்படியாக அரசின் ஊக்க தொகையை குறைப்பது, அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கு MDR விதிப்பது போன்ற முறைகளை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் யுபிஐ என்பது நுகர்வோருக்கு இலவசமாக இருந்தாலும், ரூ.2,000க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வணிகர்களுக்கான கட்டணம் விதிக்கப்படும். 2 வாரங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    English Summary

    UPI transactions above Rs 2,000 may soon attract a 0.3% Merchant Discount Rate, according to reports(இரு வாரங்களில் யுபிஐ கட்டணம் அறிமுகம்): UPI Charges likely to be in two weeks.