டெல்லி: அமெரிக்காவின் புதிய வர்த்தக அறிக்கையில் இந்தியாவின் முக்கிய தொழில் மையங்களான புனே, குஜராத், சென்னை ஆகியவை அமெரிக்காவின் சின்சினாட்டி, டேட்டன், கொலம்பஸ் நகரங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. இந்த இந்திய நகரங்களை அமெரிக்கா அழுக்கான நகரங்கள் என குறிப்பிட்டுள்ளனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் வெளிநாடுகளில் உள்ள சில உற்பத்தி மையங்களை அமெரிக்க தொழில் நகரங்களுடன் ஒப்பிடுவதற்கு அழுக்கான சகோதரி நகரங்கள், அதாவது Ugly Sister Cities என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியான தொழில் பொருட்களை உற்பத்தி செய்யும் வெளிநாட்டு தொழில் நகரங்களை குறிப்பிடவே இந்த வார்த்தையை வெள்ளை மாளிகை பயன்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்கா உற்பத்தி செய்யும் பொருட்களை இதே நகரங்கள் அமெரிக்காவுக்கு வெளியே உற்பத்தி செய்கிறது. அதை தான் அக்லி சிட்டிஸ் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்திய நகரங்கள் மீது இந்த ரிப்போர்ட்டில் சில குற்றச்சாட்டுகளையும் அமெரிக்கா முன்வைத்திருக்கிறது. சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக வரியை தவிர்ப்பதற்காக மூன்றாவது நாடுகள் வழியாக அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது சீனாவிலிருந்து நேரடியாக அமெரிக்காவுக்குள் வரும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் நிலையில், குறைந்த வரி விதிக்கப்படும் மற்றொரு நாட்டின் பெயரில் அதே பொருட்கள் அமெரிக்காவுக்குள் வந்தால், இறக்குமதியாளர்களுக்கு வரிச்சலுகை கிடைக்கும். சில சந்தர்ப்பங்களில் சீன பொருட்கள் மூன்றாவது நாட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிறிய அளவிலான மாற்றம், பேக்கிங் செய்யப்பட்ட பிறகு, அந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல், ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா மற்றும் தைவான் ஆகியவை அமெரிக்க அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அதேநேரம் இந்த ரிப்போர்ட்டில் இந்திய நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்கின்றன என்று அமெரிக்கா நேரடியாக குற்றஞ்சாட்டவில்லை. மாறாக மறைமுகமாக அக்லி சிஸ்டர் நகரங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டில் மெக்சிகோ, இந்தியா மற்றும் வியட்நாம் வழியாக சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு சுமார் 67 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் சென்றிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் புனே, குஜராத் மற்றும் சென்னை பகுதிகளில் பம்புகள் மற்றும் கம்ப்ரசர்கள் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டும் அந்த ரிப்போர்ட், அவற்றை அமெரிக்காவின் முக்கிய தொழில் நகரங்களுடன் ஒப்பிட்டுள்ளது. இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இந்திய நகரங்கள் அமெரிக்க வரி விதிகளை மீறியதாக அறிக்கை கூறவில்லை. மாறாக, பல பொருட்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க நகரங்களுக்கு இந்த நகரங்கள் கடும் போட்டி தருகிறது என்பதே இதன் அர்த்தம்! இங்கு நாம் இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். சீன உதிரி பாகங்களை பயன்படுத்துவதாலேயே அது சீன தயாரிப்பு என நாம் சொல்லிவிட முடியாது. அதாவது இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு பொருளில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டீல் அல்லது பிற உதிரிப்பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் மட்டுமே அந்தப் பொருள் சீன தயாரிப்பாக மாறாது. உதாரணமாக, ஒரு இந்திய நிறுவனம் சீனாவிலிருந்து சில உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் அவற்றை வைத்து முழுமையான பொருளை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யலாம். அது பிரச்சினை இல்லை. அதேநேரம் ஏற்கனவே சீனாவில் முழுமையான பொருளாக தயார் செய்து அதை இந்தியாவுக்கு கொண்டு வந்து, பெயர் மாற்றம் செய்து இந்திய தயாரிப்பாக ஏற்றுமதி செய்வது வேறு. இதை தான் அமெரிக்கா தவறு என சொல்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்திய உற்பத்தி துறைக்கு முக்கியமானதாக இருக்கலாம். பல நிறுவனங்கள் இப்போது சீனாவில் இருந்து தங்கள் உற்பத்தி மையங்களை இந்தியாவுக்கு மாற்றி வருகின்றன. இருப்பினும், மூல பொருட்கள் முழுமையாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அளவுக்கு நிலைமை மாற சில காலம் பிடிக்கும். ஆனால், அதற்குள் அமெரிக்கா கெடுபிடி காட்டுவதால் வரும் காலத்தில்.. மூலப்பொருட்கள் எங்கிருந்து வந்தன, இந்தியாவில் என்ன உற்பத்தி செய்யப்பட்டது, உற்பத்தி அளவு என்ன போன்ற கூடுதல் விவரங்களை அமெரிக்கா இந்திய நிறுவனங்களிடம் கேட்கலாம். அது கூடுதல் சிக்கலை இந்திய நிறுவனங்களுக்கு ஏற்படுத்தலாம்!அமெரிக்க நகரங்கள்
சிக்கல் என்ன
சென்னை, குஜராத், புனே
அமெரிக்கா சொல்வது
ஏன் முக்கியம்