ஈரான் எண்ணெய் வாங்குவதற்கான தடையை நீக்கியது அமெரிக்கா.. இந்தியாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்! எப்படி?


  • டெல்லி: ஈரான் கச்சா எண்ணெய் விதிக்கப்பட்டு இருந்த தடையை 60 நாட்களுக்கு விலக்குவதாக அமெரிக்க கருவூலத்துறை அறிவித்துள்ளது. இந்த தடை விலக்கத்தால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகம் அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணய் மலிவு அடைய வாய்ப்பு உள்ளது. சுமார் 85 சதவீதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் இந்தியாவுக்கும் இது பலனளிக்க வாய்ப்புள்ளது.

    Advertisement

    ஈரான் - அமெரிக்கா இடையே நடைபெற்று வந்த போரை நிரந்தரமாக நிறுத்தும் வகையில், சுவிட்சர்லாந்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தைக்காக இருநாடுகளுக்கும் இடையே 14 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் மற்றும், மத்தியஸ்த நாடுகளான கத்தார், பாகிஸ்தான் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

    Advertisement

    இறக்குமதிக்கு 60 நாட்கள் தற்காலிக விலக்கு

    இதற்கிடையே, ஈரானிடம் இருந்து எண்ணய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை 60 நாட்களுக்கு அமெரிக்கா விலக்கியுள்ளது. ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, அமெரிக்கா முக்கிய கொள்கை மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் மற்றும் இறக்குமதிக்கு 60 நாட்கள் தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கு வரும் ஆகஸ்ட் 21 வரை நடைமுறையில் இருக்கும். இந்த காலகட்டத்தில் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி நடவடிக்கைகள் மீது இருந்த சில அமெரிக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    ஈரானுடன் விரிவான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதும், சர்வதேச அணுசக்தி ஆய்வாளர்கள் மீண்டும் அந்த நாட்டின் அணு திட்டங்களை ஆய்வு செய்ய அனுமதி பெறுவதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா தடையை நீக்கியிருப்பதால், சர்வதேச சந்தையில் எண்ணய் விநியோகம் அதிகரிக்கும். குறிப்பாக இந்தியா போன்ற அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு, ஈரானிய எண்ணெயை மீண்டும் வாங்கும் வாய்ப்பை இந்த விலக்கு வழங்கும் என்று அத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    இந்தியாவுக்கு எப்படி பயன்?

    இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதியை நம்பியுள்ளது. எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வோ அல்லது விநியோக பாதிப்போ ஏற்பட்டால் அதன் தாக்கம் இந்தியாவின் பொருளாதாரத்தில் நேரடியாக எதிரொலிக்கிறது. உள்நாட்டு சந்தையிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் நிலை ஏற்படுகிறது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது இந்தியாவின் இறக்குமதி செலவு, பணவீக்கம், அரசின் நிதி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செலுத்தும் எரிபொருள் விலைகள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    Advertisement

    ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய கச்சா எண்ணெயை மிகப்பெரிய அளவில் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்தது. தற்போது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு முதல் 40 சதவீதம் வரை ரஷ்யாவிலிருந்து வருகிறது. இதன் மூலம் ரஷ்யாவிடம் அதிக அளவு எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது.

    மலிவு விலையில் கச்சா எண்ணெய் பெற முடியும்

    அதே நேரத்தில், சவுதி அரேபியா, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளையும் இந்தியா பெரிதும் நம்பியுள்ளது. 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 50 சதவீதம் OPEC நாடுகளிலிருந்து வந்ததாக மதிப்பிடப்படுகிறது. கச்சா எண்ணெய்க்கு இந்தியா இறக்குமதியை நம்பியிருப்பதால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் போதெல்லாம் இந்தியாவுக்கு நெருக்கடிகளை உருவாக்குகிறது. எனவே, ஈரானிய எண்ணெய் மீண்டும் உலக சந்தையில் கிடைக்கும் வாய்ப்பு உருவானால், இந்தியாவுக்கு கூடுதல் விநியோக ஆதாரமாக அது அமையக்கூடும். இதனால் இந்தியாவால் மலிவு விலையில் கச்சா எண்ணையை பெற முடியும்.

    English Summary

    The US Treasury Department has temporarily relaxed restrictions on Iranian crude oil for 60 days. The decision is expected to increase global oil availability and reduce international crude prices. For India, which relies heavily on oil imports, lower crude prices could help reduce import costs, fuel inflation, and fiscal pressure.