சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக!

  • டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை முதல்வர் விஜய் சந்தித்துள்ளார். 3 நாள் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ள விஜய், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் தவெக விரைவில் இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, தேசிய அளவிலான அரசியல் களம் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 3 நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய், இன்று காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைவர்களையும் ஒரே இடத்தில் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

    Advertisement

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை முதல்வர் விஜய் சந்தித்துள்ளது, தமிழகம் மற்றும் தேசிய அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. டெல்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் விஜய் காங்கிரஸ் தலைவர்களின் இல்லத்தில் இந்த முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முடிவுகளைத் தீர்மானிக்கும் சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் கார்கே ஆகிய நால்வரையும் முதல்வர் விஜய் ஒன்றாக சந்தித்திருப்பது சாதாரணமான ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாகக் கருத முடியாது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, தேசிய அளவில் தங்களின் அரசியல் நிலப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் ஒரு முயற்சியாகவே இந்த டெல்லி விசிட் அமைந்துள்ளது.

    Advertisement

    இந்த சந்திப்பைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் தவெக விரைவில் 'இந்தியா' கூட்டணியின் ஒரு முக்கிய அங்கமாக அதிகாரப்பூர்வமாக மாறும் என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் மிக வலுவாக நம்புகின்றன. தமிழகத்தில் திமுக-விற்கு மாற்றாக உருவெடுத்துள்ள தவெக-வுடன் காங்கிரஸ் தலைமை இவ்வளவு நெருக்கம் காட்டுவது, தமிழகத்தில் உள்ள பழைய கூட்டணிக் கணக்குகளை மாற்றியமைக்கும் எனத் தெரிகிறது.

    நாடாளுமன்றத்தில் 'இந்தியா' கூட்டணியின் பலத்தை அதிகரிக்க, தென் மாநிலங்களில் இருந்து முதல்வர் விஜய்யின் ஆதரவு தங்களுக்குப் பெரிதும் உதவும் என காங்கிரஸ் கருதுகிறது. தமிழக முதல்வர் விஜய்யின் இந்த 3 நாள் டெல்லி பயணம், வெறும் அரசுத் திட்டங்களுக்கான நிதி கோருவதோடு நின்றுவிடாமல், தேசிய அரசியலில் ஒரு புதிய நகர்வை உருவாக்கியுள்ளது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தவெக-வின் அடுத்தகட்ட தேசிய அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உற்றுநோக்கத் தொடங்கியுள்ளது.

    English Summary

    Vijay: CM Vijay Meets Sonia Gandhi, Mallikarjun Kharge, and Rahul Gandhi in Delhi