SIR பணியின் போது விஐபிகளுக்கு ஸ்பெஷல் சர்வீஸ்? தேர்தல் ஆணைய செயல்பாடுகள் மீது கிளம்பும் சந்தேகம்!

  • டெல்லி: நாடு முழுவதும் பல மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், இந்த பணியில் விஐபி வாக்காளர்களுக்கு சாதகமாகவும், சாதாரண குடிமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் விதிகள் தளர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

    Advertisement

    இது குறித்து 'தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்' செய்தி ஊடகத்தில் வெளியாகியிருக்கும் கட்டுரை கவனம் பெற்றிருக்கிறது. தேர்தல் ஆணையம் SIR பணிகளில் இரட்டை நடைமுறையை பின்பற்றியதாக இந்த கட்டுரை குற்றம்சாட்டியிருக்கிறது.

    Advertisement

    டெல்லியில் நடைபெற்ற SIR பணிகளை மேற்கோள் காட்டியிருக்கும் இந்த கட்டுரை, வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது அமைச்சர்கள், நீதிபதிகள், பிரபலங்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் போன்றோரை விஐபி வாக்காளர்களாக தனியாக குறிக்க தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறது.

    வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்(பிஎல்ஓ) பயன்படுத்தும் செயலியில் 'Mark VIP' என்ற தனிப்பகுதி ஜூலை 30 அன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விஐபி வாக்காளர்களை எளிதாக அடையாளம் கண்டு, அவர்கள் நேரில் வந்து வரிசையில் நிற்பதை தவிர்க்கும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. வாக்காளர் பட்டியலில் குழப்பம் அல்லது விடுபடுதல் காரணமாக அறிவிப்பு பெற்ற சாதாரண குடிமக்கள் தங்களின் வேலை நாளையும், சம்பளத்தையும் இழந்து.. தகுதி சான்றுகளை நிரூபிக்க விசாரணை மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    Advertisement

    ஆனால், இன்னொரு பக்கம் விஐபி வாக்காளர்களுக்கு ஏதேனும் அறிவிப்புகள் இருந்தால், அவர்கள் விசாரணைக்கு நேரில் வர தேவையில்லை. அதிகாரிகள் அவர்களின் வீடுகளுக்கே சென்று ஆவணங்களை பெற்றுக்கொண்டு, விவகாரங்களை ஒரு சில மணி நேரங்களிலேயே முடித்து விடுகின்றனர். உதாரணமாக டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் வாக்காளர் அடையாள அட்டை பிரச்சனை எவ்வித விசாரணையும் இல்லாமல் சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டதை இந்த கட்டுரை மேற்கோள்காட்டியுள்ளது.

    இப்படியா சலுகைகள் குறித்து சட்டம் மிக தெளிவாக விளக்கமளித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 குடிமக்களுக்குள் இப்படிப்பட்ட எந்தவொரு விஐபி சலுகையோ.. பிரத்யேக வழிமுறைகளோ கொடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்திற்கு பின்னாளில் எந்தவித அவப்பெயரோ அல்லது சங்கடமோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே.. வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் அதிகாரிகளுக்கு இத்தகைய ரகசிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கட்டுரை தெரிவிக்கிறது.

    Advertisement

    மொத்தத்தில், டெல்லியில் நடைபெற்ற SIR பணிகளில் தேர்தல் ஆணையம் விதிகளை பகிரங்கமாக மீறியிருப்பது தெரிய வந்திருக்கிறது என்று கட்டுரை கூறுகிறது. ஏற்கெனவே தேர்தல் ஆணையம் ஏகப்பட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்.. SIR பணியிலும் முறைகேடு என்கிற குற்றசாட்டு.. தேர்தல் ஆணையத்தின் மீதான நெருக்கடியை அதிகரித்திருக்கிறது.

    English Summary

    VIP voters vs common voters: Special Intensive Voter List Revision (SIR) work was carried out in many states across the country. But there have been allegations that the rules have been relaxed in this process to favor VIP voters and harm ordinary citizens.