பதவியே போனாலும் கவலையில்லை.. ஓபிசி பிரிவுக்கு இடஒதுக்கீடு தந்ததால்.. ஆட்சியை இழந்த சமூக நீதி காவலன் விபி சிங்


  • டெல்லி: இந்திய வரலாற்றில் குறுகிய காலமே பிரதமராக இருந்தவர்களில் ஒருவர் விபி சிங். இருப்பினும், நூற்றாண்டுகளாகத் தேங்கிக் கிடந்த சமூகப் படிநிலைகளைத் தனது ஒற்றை முடிவால் அசைத்துப் பார்த்தவர்! 1990ம் ஆண்டு அவர் எடுத்த ஒற்றை முடிவு தான் நாடு முழுக்க இருக்கும் பிற்படுத்த மக்களுக்கு இட ஒதுக்கீடு என்ற அதிகாரத்தை வழங்கியது. இதன் காரணமாகவே அவர் சமூக நீதி காவலனாக அறியப்படுகிறார்.

    Advertisement

    "ஜனநாயகம் என்பது வெறும் வாக்குகளுக்கானது மட்டுமல்ல; அது அதிகாரம் மறுக்கப்பட்ட எளிய மக்களுக்கானது!" என்ற தத்துவத்தை இந்தியாவின் நாடாளுமன்ற அதிகார மையத்தில் அழுத்தமாகப் பதிவு செய்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் எனப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் பிறந்த தினம் இன்று! 1931-ம் ஆண்டு அலகாபாத்தில் பிறந்த இவர், இந்திய வரலாற்றில் வெறும் பிரதமராக மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வை மாற்றிய சமூக நீதியின் காவலனாக வலம் வருகிறார்.

    Advertisement

    விபி சிங்

    ராஜீவ் காந்தி அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த வி.பி.சிங், போஃபர்ஸ் ஊழல் விவகாரத்தை மிகக் கடுமையாக எதிர்த்து காங்கிரஸிலிருந்து வெளியேறினார். தூய்மையான அரசியல்வாதி என்ற பிம்பத்தோடு, ஜனதா தளம் கட்சியைத் தொடங்கி, காங்கிரஸுக்கு எதிராகப் பல்வேறு எதிர்க்கட்சிகளை இணைத்து தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கினார்.

    1989 பொதுத்தேர்தலில் காங்கிரஸுக்குப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், வி.பி.சிங்கின் தேசிய முன்னணி கூட்டணிக்கு இடதுசாரிகள் மற்றும் வலதுசாரியான பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு முரண்பட்ட துருவங்களும் வெளியில் இருந்து ஆதரவளித்தன. இந்த அசாத்திய அரசியல் நகர்வின் மூலம், 1989 டிசம்பர் 2ம் தேதி இந்தியாவின் 7-வது பிரதமராக வி.பி.சிங் பொறுப்பேற்றார்.

    Advertisement

    மண்டல் கமிஷன்

    இப்படி இக்கட்டான சூழலில் யார் பிரதமராக பதவியேற்றாலும் அவர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றவே நினைப்பார்கள். ஆனால், விபி சிங் செய்தது முற்றிலும் வேறு! பல ஆண்டுகாலமாகப் கிடப்பில் போடப்பட்டு இருந்த 'மண்டல் கமிஷன்' பரிந்துரைகளைக் கையில் எடுத்தார். எவ்வித அரசியல் லாப நஷ்டங்களையும் பாராமல் 1990ம் ஆண்டு துணிச்சலுடன் அமல்படுத்தியவர் வி.பி.சிங். மத்திய அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஒற்றை முடிவுதான் சாத்தியமாக்கியது.

    இதன் மூலம் பட்டியல் இனத்தவர் (SC) மற்றும் பழங்குடியின மக்களுக்கான (ST) இட ஒதுக்கீட்டையும் சேர்த்து மொத்த ஒதுக்கீடு 49 சதவீதமாக உயர்ந்தது. இது வெறும் சலுகை அல்ல, காலம் காலமாக தங்களுக்கு மறுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்திற்கான 'அதிகாரப் பகிர்வு' என்பதை இந்தியாவிற்கு உணர்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் அது.

    Advertisement

    போராட்டங்கள்

    இதற்காக அவர் கொடுத்த விலை பெரியது. ஓபிசி மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வி.பி.சிங் அறிவித்தவுடன், இந்திய அரசியலில் பூகம்பம் வெடித்தது. வட மாநிலங்களில் உயர் சாதி மாணவர்களின் தற்கொலை முயற்சிகள் மற்றும் வன்முறை போராட்டங்களால் நாடு தழுவிய கொந்தளிப்பு ஏற்பட்டது. வி.பி.சிங் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வந்த பாஜக, இந்த மண்டல் அரசியலுக்கு போட்டியாக 'கமண்டல' (ராமர் கோயில்) அரசியலைக் கையில் எடுத்தது. எல்.கே.அத்வானி ரத யாத்திரையைத் தொடங்கினார்.

    ரத யாத்திரை பீகாருக்குள் நுழைந்தபோது, வி.பி.சிங்கின் கேட்டுக் கொண்டதால் லாலு பிரசாத் யாதவ் அத்வானியை கைது செய்து சிறையிலடைத்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக, வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உடனடியாக வாபஸ் பெற்றது. இதனால் 1990 நவம்பர் 7ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்று, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் வி.பி.சிங்!

    Advertisement

    அம்பேத்கருக்கு கவுரவம்

    வி.பி.சிங்கின் சமூக நீதிப் பார்வை என்பது வெறும் இடஒதுக்கீட்டோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு ஆற்றிய முதல் உரையே பட்டியல் இன மக்கள், சிறுபான்மையினர் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைப் பற்றியதாகத்தான் இருந்தது. அதுமட்டுமின்றி, இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்தை நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் முதன்முதலாக திறந்து வைத்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடையாளங்களுக்குப் பெரும் வரலாற்று அங்கீகாரத்தைத் தேடித்தந்தவர் வி.பி.சிங் தான்.

    மேலும், இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, அண்ணல் அம்பேத்கருக்கு அவரது மறைவுக்குப் பின் பல தசாப்தங்களாக மறுக்கப்பட்டு வந்தது. 1990ல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் அம்பேத்கரின் சமூகப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும், தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக அம்பேத்கருடன் இணைந்து பௌத்த மதத்திற்கு மாறிய ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் தொடர சட்டம் கொண்டு வந்தார்.

    Advertisement

    பதவி போனாலும் கவலை இல்லை

    நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பிறகுத் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும்போது, "என் நாற்காலி போனதைப் பற்றி எனக்குக் கவலையில்லை, பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையையும், சமூக நீதியையும் நிலைநாட்டிவிட்டேன்" என்று கம்பீரமாக வெளியேறினார் இந்த மாபெரும் தலைவர் விபி சிங்!

    English Summary

    Former Prime Minister VP Singh birth anniversary, revisit his bold implementation of the Mandal Commission recommendation(இந்தியாவின் சமூக நீதி காவலன் விபி சிங்): VP Singh is the father social justice in India.