சக்கர கோட்டை.. இந்தியாவிற்கு புதின் கொண்டு வந்த பாதுகாப்பு வாகனத்தின் வியக்க வைக்கும் பின்னணி!

  • டெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க 3 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வந்துள்ளார். இந்த பயணத்தின்போது புதின் தனது பாதுகாப்புக்காக ரஷ்யாவில் இருந்து 'ஆரஸ் செனாட்' லிமோசின் காரை கொண்டு வந்துள்ள நிலையில் அந்த காரின் வியக்க வைக்கும் சிறப்புகள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை இந்தியா தான் தலைமையேற்று நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்துள்ளார். 'பறக்கும் கிரெம்ளின்' (Flying Kremlin) என அழைக்கப்படும் நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட தனி விமானத்தில் புதின் ரஷ்யாவில் இருந்து டெல்லிக்கு வந்தார்.

    Advertisement

    டெல்லியில் நாளை மறுநாள் வரை 3 நாட்கள் புதின் தங்க உள்ளார். நாளை தொடங்கி நாளை மறுநாள் வரை நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்று விட்டு புதின் ரஷ்யா திரும்ப உள்ளார். இந்நிலையில் தான் புதினுக்காக அவரது பாதுகாப்பு வாகனம் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வாகனத்தின் பெயர் 'ஆரஸ் செனாட்' லிமோசின் (Aurus Senat Limousine). இதுதான் புதின் பயணிக்கும் பாதுகாப்பான காராகும்.

    இந்நிலையில் தான் அந்த காரின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பயன்படுத்தும் 'ஆரஸ் செனாட்' லிமோசின் கார் கடந்த 2018ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் விளாடிமிர் புதின் பயன்படுத்தி வருகிறார். 'கோர்டெஷ்' (Kortezh) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கார் உருவாக்கப்பட்டது. இந்த காரை ரஷ்யாவின் 'ஆரஸ் மோட்டார்ஸ்' (Aurus Motors) நிறுவனம் ரஷ்ய அரசு ஆராய்ச்சி நிறுவனமான என்ஏஎம்ஐ, சொல்லர்ஸ் ஜேஎஸ்சி (Sollers JSC) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தாவாஜூன் ஹோல்டிங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளது. சோவியத் காலத்து 'ZIS-110' லிமோசின் காரின் வடிவமைப்பை பின்பற்றி இந்த கார் உருவாக்கப்பட்டது.

    Advertisement

    பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த காரில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த காரின் எடை அதிகமாக உள்ளது. இதனால் இந்த கார் ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்ட 4.4-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 இன்ஜினை கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 598 குதிரைத்திறன், 880 Nm of torque கொண்டது. இநத காரில் 9 ஸ்பீட் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. 9 வினாடியில் இந்த காரின் வேகத்தை 0ல் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்துக்கு உயர்த்த முடியும். அதிகபட்சமாக காரை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கலாம்.

    இந்த கார் 5,630 மிமீ நீளம், 2,000 மிமீ அகலம், மற்றும் 1,700 மிமீ உயரம் கொண்டது. வீல்பேஸ் 3,300 மிமீ ஆகும். இந்த காரில் ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் டிபார்ச்சர் வார்னிங், எலக்ட்ரானிக் ட்ராக்சன் கண்ட்ரோல் மற்றும் அதிநவீன பிரேக்கிங் அமைப்புகள் உள்ளிட்டவை உள்ளன. இந்த காரை குண்டுகள் துளைக்காது. குண்டுகள் துளைக்க முடியாத வகையில் பல அடுக்குகளாக கண்ணாடிகள் உள்ளன. அதேபோல் வெடிகுண்டுகள் தாக்குதலையும் இந்த கார் தாங்கும் திறன் கொண்டுள்ளது. காரின் அடிப்பகுதியில் வெடிகுண்டு தாக்குதலை தாங்கும் வகையில் ஸ்டீல் பிளேட்டிங் வசதி காரை சுற்றி உள்ளது. எரிபொருள் டேங்கை சுற்றி இதற்காக பிரத்யேக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மேலும் கார் டயர் வெடித்தாலோ அல்லது பஞ்சர் ஆனாலும் கூட கார் நிற்காது. தொடர்ந்து இயங்கும் வகையில் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 'ரன்-ஃப்ளாட்' டயர்கள், பிரத்யேக சஸ்பென்ஷன்களுடன் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ள காரணத்தினாலேயே புதினின் இந்த கார் 'சக்கரங்கள் கொண்ட கோட்டை' என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ரஷ்யாவில் விளாடிமிர் புதின் ஒரு இடத்துக்கு செல்லும்போது அவருடன் 24 கார்கள் செல்லும். ஆனால் வெளிநாட்டு பயணங்களின்போது புதின் இந்த ஒரு காரை மட்டுமே பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். விளாடிமிர் புதின் பயன்படுத்தும் இந்த காரை ரஷ்யா பொதுமக்களும் வாங்கி பயன்படுத்தலாம். இதற்காக ஆண்டுக்கு 120 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஒரு காரின் விலை 18 மில்லியன் ரூபிள்கள். இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.50 கோடியாகும். ஆனால் இந்த கார் சாதாரணமாக தான் இருக்கும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பயன்படுத்தும் காரை போல் பாதுகாப்பு அம்சங்கள் என்பது இருக்காது.

    Advertisement

    பாதுகாப்பு அம்சங்களை தாண்டி காரில் சொகுசு வசதிகளும் ஏராளமாக உள்ளன. கிளைமேட்டை பொறுத்து தன்மையை மாற்றும் வகையிலான இருக்கைகள், ரகசியங்களை பாதுகாக்கும் வகையில் தடுப்புகள், என்கிரிப்ட் செய்யப்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகளையும் இந்த கார் கொண்டிருக்கும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 25 ஆண்டுகளாக அந்த நாட்டை வழிநடத்தி வருகிறார். இதனால் இவருக்கு பல நாடுகளில் எதிரிகள் உருவாகி உள்ளன. இதனால் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது பாதுகாப்பை முன்கூட்டியே உறுதி செய்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். வெளிநாடுகளுக்கு செல்லும்போது தனி விமானத்தை பயன்படுத்தும் விளாடிமிர் புதின், அதேபோல் தனது பாதுகாப்புக்காக 'ஆரஸ் செனாட்' லிமோசின் காரையும் பயன்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் போது விளாடிமிர் புதின் இந்த காரை பயன்படுத்தினார். அப்போது பிரதமர் மோடியும், விளாடிமிர் புதினும் இந்த காரில் ஒன்றாக பயணித்தது பேசும் பொருளானது.

    English Summary

    Russian President Vladimir Putin has arrived in Delhi for a three-day visit to attend the BRICS summit. Key details regarding the impressive features of the ‘Aurus Senat’ limousine—which Putin brought from Russia for his security—have now been revealed.