சிதைந்துபோன மாணவர்கள் நம்பிக்கை.. CBSE விவகாரத்தில் குளறுபடிகள் என்ன? அதிர வைக்கும் ரிப்போர்ட்

  • டெல்லி: நடப்பு 2026ம் ஆண்டு சிபிஎஸ்இ +2 வகுப்பு பொதுத்தேர்வு டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் ஓஎஸ்எம் சிஸ்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், இதனால் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓஎஸ்எம் சிஸ்டம் என்றால் என்ன.. அது இப்போது மிகப் பெரிய சர்ச்சையாக வெடிக்க என்ன காரணம்.. இதில் இதுவரை நடந்த விவகாரங்கள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

    Advertisement

    இந்திய மாணவர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் கடந்த சில வாரங்களாகவே பல சம்பவங்கள் நடந்து வருகிறது. முதலில் நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பரபரப்பைக் கிளப்பியது. இதன் காரணமாக நீட் தேர்வும் கூட ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் முடியும் முன்பே இப்போது புதிய விவகாரம் வெடித்துள்ளது. அதுதான் சிபிஎஸ்சி ஓஎஸ்எம்.

    Advertisement

    தகர்ந்த நம்பிக்கை

    நம்பிக்கையோடு தேர்வு எழுதிய லட்சக்கணக்கான இந்திய மாணவர்களின் நம்பிக்கையை, நடப்பு சிபிஎஸ்இ +2 வகுப்பு பொதுத்தேர்வு டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு குளறுபடி சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளது. பாடங்களைத் திருத்தும் முறையில் ஏற்படும் பிழைகளைக் குறைக்க நவீனமயமாக்கல் என்ற பெயரில் சிபிஎஸ்இ அவசர அவசரமாக அறிமுகப்படுத்திய 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' (OSM) சிஸ்டம் தான் ஒட்டுமொத்தப் பூகம்பத்திற்கும் காரணமாக மாறியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்தத் தேர்ச்சி விகிதம் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 85.20% ஆகச் சரிந்துள்ள நிலையில், மாணவர்கள் எதிர்கொண்ட துயரங்கள் உங்களை அதிரவைக்கும்.

    Advertisement

    குளறுபடிகள்

    விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முயன்ற மாணவர்கள், தொழில்நுட்பக் கோளாறுகளால் சிபிஎஸ்இ போர்ட்டலில் அடுக்கடுக்கான நரக வேதனையை அனுபவித்துள்ளனர். முதலில் விடைத்தாள் குளறுபடி.. வேதாந்த் போன்ற பல மாணவர்கள் மறுமதிப்பீட்டு முறை மூலம் தங்களின் விடைத்தாள் நகலைப் பெற்றுப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதில் இருந்த கையெழுத்து அவர்களுடையதே அல்ல.. அதாவது வேறொரு மாணவனின் விடைத்தாள், இவர்களின் ரோல் நம்பருடன் இணைக்கப்பட்டிருந்தது அம்பலமானது.

    அடுத்து போர்ட்டல் மற்றும் கட்டணக் குளறுபடிகள்.. மறுமதிப்பீட்டுப் போர்ட்டல் அதீத டிராஃபிக் காரணமாக முற்றிலும் முடங்கியது. பணம் செலுத்தும் போது கேட்வேக்கள் செயலிழந்ததால், மாணவர்களின் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும் விண்ணப்பம் பதிவாகவில்லை.. பலருக்கு அதீதக் கூடுதல் கட்டணங்கள் கழிக்கப்பட்டன. அடுத்து மங்கலான ஸ்கேன் தரம்.. விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்ததில் பல பக்கங்கள் மங்கலாகவும், படிக்க முடியாதபடியும், சில பக்கங்கள் முற்றிலும் விடுபட்டும் போயிருந்தன. 'இப்படிப்பட்ட பேப்பர்களை வைத்து ஆசிரியர்கள் எப்படி மார்க் போட்டிருக்க முடியும்?' என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    Advertisement

    திடுக் தகவல்கள்

    ஆரம்பத்தில் ஒற்றை இலக்க எண்களையோ அல்லது ஃபெயில் மார்க்குகளையோ வாங்கிய பல மாணவர்கள், விடைத்தாளைச் சரிபார்த்த பிறகு தங்களின் மதிப்பெண்கள் 60 முதல் 80 மார்க்குகள் வரை எகிறியதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர். எத்திகல் ஹேக்கர்கள் நடத்திய ஆய்வில், இந்த டிஜிட்டல் போர்ட்டலில் கடுமையான பாதுகாப்பு ஓட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் ஐடிக்கள் மற்றும் கிரேடிங் ஸ்கிரீன்களை யார் வேண்டுமானாலும் சட்டவிரோதமாக அணுக முடியும் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது.

    விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, நாடு தழுவிய அளவில் மாணவர்களின் கொந்தளிப்பு வெடித்ததை அடுத்து மத்திய அரசு இதில் தலையிட்டு அவசர அவசரமாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். இந்த நிர்வாக அலட்சியத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கச் சிபிஎஸ்இ வாரியத்திடம் விரிவான அறிக்கையைக் கேட்டுள்ளார்.

    Advertisement

    களமிறக்கப்பட்ட வல்லுநர்கள்

    மேலும், போர்ட்டலின் தொழில்நுட்பக் கோளாறுகளையும், டிஜிட்டல் ஓட்டைகளையும் கண்டறிந்து சரிசெய்ய ஐஐடி மெட்ராஸ் போன்ற முதன்மை நிறுவனங்களின் தொழில்நுட்ப நிபுணர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். தங்களின் தவறை ஒப்புக் கொண்டுள்ள சிபிஎஸ்இ வாரியம், மறுமதிப்பீட்டிற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. கூடுதல் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்குத் தானியங்கி ரீஃபண்ட் செய்வதாக உறுதியளித்துள்ளதோடு, குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்க மறுமதிப்பீட்டுக் கட்டணத்தை அதிரடியாக ₹100ஆகக் குறைத்துள்ளது.

    மதிப்பெண் சான்றிதழ்களைப் புதுப்பித்து விடலாம்.. ஆனால் இந்த சிஸ்டத்தின் மீது மாணவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை சிதைந்து போய் இருக்கிறது. போதிய சோதனை இல்லாமல் கொண்டு வரப்பட்ட இந்த முறையால் மாணவர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு யார் தீர்வை சொல்வார்கள் என்பதே இப்போது மிகப் பெரிய கேள்வியாக வந்து நிற்கிறது.

    English Summary

    CBSE newly introduced On-Screen Marking (OSM) evaluation system has sparked national outrage due to technical bugs, misplaced answer sheets(சிபிஎஸ்இ மார்க் திருத்த குளறுபடிகள்): All things to know about CBSE OSM System.