டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். இன்று காலை திடீரென போராட்ட களத்தில் இறங்கிய டெல்லி போலீசார், சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றினர். மேலும், கரப்பான் பூச்சி கட்சி தலைவர் திப்கேவும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். நீட் முறைகேடுகளால் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தில் கடந்த 20 நாட்களாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் பங்கேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இன்று சனிக்கிழமை அங்கு போராட்ட களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலையில் போராட்ட களத்தில் குவிந்த டெல்லி போலீசார், சோனம் வாங்சுக்கை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சனிக்கிழமை அதிகாலை ஜந்தர் மந்தருக்கு வந்த டெல்லி போலீசார், சோனம் வாங்சுக்கை போராட்ட களத்தில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளனர். மருத்துவமனைக்கு வருமாறு கேட்டுள்ளனர். இருப்பினும், போலீஸ் கோரிக்கையை ஏற்க மறுத்த வாங்சுக் போராட்டத்தை தொடருவேன் என கூறியதாக தெரிகிறது. இருப்பினும், டெல்லி போலீசார் அவரை கட்டாயப்படுத்தி போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சோனம் வாங்சுக் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டதால் அங்கிருந்த கரப்பான் பூச்சி கட்சியினர் கோபமடைந்தனர். டெல்லி போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அங்கு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அவர்களும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். முன்னதாக சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு தினசரி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், "ஒவ்வொரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் அறிவுறுத்தியது. அப்போது மருத்துவர் பரிந்துரை அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க டெல்லி போலீசார் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், "அபிஜித் திப்கே தங்கியிருந்த இடத்தில் டெல்லி போலீசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். சோனம் வாங்சுக் போராட்ட தளத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படுகிறார். மாணவர்கள் மீது தடியடி நடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது" என்று குற்றஞ்சாட்டியுள்ளார். அதேபோல கரப்பான் பூச்சி தலைவர் அபிஜித் திப்கே, "டெல்லி போலீசார் என்னை தாக்கினர். வெளியேற விடாமல் காவலில் வைத்துள்ளனர்" என்று குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான சில வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. டெல்லி போலீசாருடன் அங்கு துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் தொடர்கிறது.சோனம் வாங்சுக் வெளியேற்றம்
என்ன நடந்தது!
பின்னணி
பரபர குற்றச்சாட்டு