டெல்லி: இந்தியாவில் இப்போது மிக பெரிய விவாதமாக வெடித்துள்ள விஷயங்களில் ஒன்று E20 பெட்ரோல். மத்திய அரசு எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு அதீத முக்கியத்துவம் தரும் நிலையில், இதற்கு ஒரு பக்கம் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க சர்வதேச அளவில் எந்தெந்த நாடுகளில் எத்தனால் கலப்பு பெட்ரோல் இருக்கிறது.. அங்கு எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் இப்போது E20 பெட்ரோல் நாடு முழுக்க விற்பனை செய்யப்படுகிறது. இந்த எத்தனால் கலப்பு 10%ஆக இருந்த நிலையில், இப்போது 20%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. E20 என்பதை 2030ல் எட்ட இந்தியா இலக்கு நிர்ணயம் செய்திருந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பே அந்த இலக்கை எட்டிவிட்டது.
அதேநேரம் E20 பெட்ரோல் காரணமாக வாகனங்களின் மைலேஜ் குறைவதாகவும் இன்ஜின் பாகங்கள் பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. பொதுவாக இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தபோது, மத்திய அரசு மற்ற நாடுகளை உதாரணமாகச் சொல்கிறது. அதாவது பெரும்பாலான உலக நாடுகளில் எத்தனால் கலப்பு பெட்ரோல் என்பது ஏற்கனவே இருக்கும் நடைமுறை என்பதே மத்திய அரசு வாதமாக இருக்கிறது. அதில் குறிப்பாகப் பிரேசில் நாட்டை சொல்லலாம். கடந்த ஆண்டு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூட பிரேசிலை தான் உதாரணமாகக் குறிப்பிட்டார். பிரேசில் பல ஆண்டுகளாகவே E27, அதாவது 27 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோலை தான் பயன்படுத்தி வருகிறது. அங்கு இன்ஜின் பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை என்று ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டார். பிரேசிலை பொறுத்தவரை எத்தனால் கலப்பு என்பது 1973ல் தொடங்கியது. அப்போது ஏற்பட்ட சர்வதேச கச்சா எண்ணெய் நெருக்கடியே அதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. உலகளவில் அதிகளவில் கரும்பை உற்பத்தி செய்யும் நாடாகப் பிரேசில் இருந்த நிலையில், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தப் பிரேசில் முடிவு செய்தது. அதன்படியே 1975ல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு பல கட்டங்களை கடந்து 2003ல் அங்கு முதல்முறையாக Flex Fuel தொழில்நுட்பம் அறிமுகமானது. இந்த வாகனங்கள் பெட்ரோல்- எத்தனால் கலவை எவ்வளவு இருந்தாலும் இயங்கும். இப்போது பிரேசில் நாட்டில் விற்கப்படும் புதிய கார்களில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்த FFV வகையை சேர்ந்தவை. அங்கு கிடைக்கும் பெட்ரோல் E27.5 முதல் E30 வரை இருக்கும். இந்தியாவிலும் இதே தொழில்நுட்பத்தில் இப்போது வாகனங்கள் வர ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரேசில் மட்டுமின்றி பல நாடுகள் எத்தனால் கலப்பு பெட்ரோலை பயன்படுத்துகிறது. உதாரணமாக பராகுவே நாட்டில் E30 கலவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. தாய்லாந்தில் E20 முதல் E85 வரை பல வகைகள் பயன்பாட்டில் உள்ளன.. ஜிம்பாப்வே நாடும் E20 தான் பின்பற்றுகிறது. பிலிப்பைன்ஸ் E10ஐ கட்டாயமாக்கியுள்ள நிலையில், E20 விற்பனைக்கும் அனுமதி அளித்துள்ளது. அவ்வளவு ஏன் கச்சா எண்ணெய் கொட்டி கிடக்கும் உலக வல்லரசான அமெரிக்காவிலும் கூட எத்தனால் கலப்பு பெட்ரோல் தான் விற்கப்படுகிறது. அங்கு E10 மற்றும் E15 அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. FFV வாகனங்களுக்கு E85 கூட கிடைக்கிறது. இப்படி உலகின் பல நாடுகளிலும் எத்தனால் கலப்பு பெட்ரோல் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால் தான் இந்தியாவும் அதை பயன்படுத்துகிறது. 2025 ஏப்ரல் 1 முதல் E20 பெட்ரோல் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1.9 லட்சம் கோடி அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. 310 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கும் ரூ.1.6 லட்சம் கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. இப்படி பல வழிகளில் நமக்கு நன்மையே கிடைக்கிறது. இந்தியாவில் E20 காரணமாக மைலேஜ் குறைகிறது என்ற புகார்கள் இருப்பது உண்மை தான். இருப்பினும் இதற்குப் பெரியளவில் ஆய்வு முடிவுகள் இல்லை. வல்லுநர்களும் கூட மைலேஜ் சற்று குறைந்தாலும் கூட பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்கிறார்கள். அதேநேரம் E20க்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு இது எப்படி செட் ஆகும் என்ற கேள்வி மக்களிடம் இன்னும் இருக்கவே செய்கிறது.E20 பெட்ரோல்
"E20 பெட்ரோல் வேண்டவே வேண்டாம்.." இந்தியாவின் முகத்திற்கு நேராக நோ சொன்ன பூடான்.. என்ன காரணம்?
பிரேசில்
உலக நாடுகள்
E20 பெட்ரோல் பழைய வாகனங்களில் ரப்பர் பகுதியை பாதிக்கும்.. வெளிவராத ARAI ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியா