டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம் அறிவித்திருந்த சூழலில், அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கரப்பான் பூச்சி கட்சியை இனி அதன் தேசிய அமைப்பு பொறுப்பாளர் அஜின்க்யா ஷிண்டே தலைமை தாங்குகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த அஜின்க்யா ஷிண்டே.. அவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்திற்கு முன்னதாக அந்த அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் நடைபெறுமா என்பதில் கேள்வி எழுந்தது. இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சியை இனி அதன் தேசிய அமைப்பு பொறுப்பாளர் அஜின்க்யா ஷிண்டே தலைமை தாங்குகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்திலேயே வைத்து அபிஜித் தீப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கரப்பான் பூச்சி கட்சியின் சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் தீப்கே, "இந்த வீடியோவை நீங்கள் பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், நானும் சவுரவ் தாஸும் அசுதோஷ் ரங்காவும் கைது செய்யப்பட்டுள்ளோம் என்று அர்த்தம். நாங்கள் இல்லாத நிலையில், அஜின்க்யா போராட்டத்தையும் சிஜேபி இயக்கத்தையும் வழிநடத்துவார். அவரை பாலோ செய்யுங்கள்" என்று தெரிவித்தார். இதற்கிடையே போராட்டத்தில் பங்கேற்க வருபவர்களை போலீசார் தடுத்தால், அவர்கள் தடுத்து நிறுத்தப்படும் இடத்திலேயே போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று கரப்பான் பூச்சி கட்சியை இப்போது வழிநடத்தும் அஜின்க்யா ஷிண்டே அழைப்பு விடுத்துள்ளார். அஜின்க்யா ஷிண்டே மேலும் கூறுகையில், "நமது ஒற்றுமையை கண்டு அரசு அஞ்சுகிறது. ஜந்தர் மந்தருக்கு வாருங்கள். போலீசார் உங்களைத் தடுத்தால், அந்த இடத்தையே ஜந்தர் மந்தராக மாற்றிப் போராடுங்கள்" என்று அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த 35 வயதான அஜின்க்யா ஷிண்டே, கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம் பெற்றவர். புனேவில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய அவர், பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அவரது பெற்றோர் முதலில் அலிபாக் பகுதியில் விவசாயம் செய்து வந்ததாகவும், பின்னர் லாத்தூரில் குடியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அபிஜித் தீப்கேவுடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக பயணித்து வரும் ஷிண்டே, 2016ஆம் ஆண்டு கோவாவில் அவரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அன்றிலிருந்து இருவரும் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அரசியலில் முழுநேரமாக ஈடுபடுவதற்கு முன்பு, ஷிண்டே பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கோவா சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஓராண்டு ஈடுபட்டார். எனினும், அங்கு ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு தொகுதியைக்கூட வென்று கொடுக்க முடியவில்லை. அதன்பிறகு மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சியின் குழுவில் இணைந்த அவர், சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளராகவும், கட்சியின் இளைஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார் என்று கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அபிஜித் தீப்கே, ஷிண்டே கரப்பான் பூச்சி கட்சியில் இணைந்தார். அவருக்கு தேசிய அமைப்பு பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக மாறினார். ஆனால், நேரடியாக அவரை நிர்வாகக் குழுவில் சேர்த்தது சர்ச்சையும் கிளப்பியது. கட்சியில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு தீப்கே முன்னுரிமை அளிப்பதாக குஜராத்தை சேர்ந்த இருவர் குற்றஞ்சாட்டி இருந்தனர்.அடுத்து யார்
யார் இந்த அஜின்க்யா ஷிண்டே?
ஆம் ஆத்மி
சர்ச்சை