டெல்லி: இளைஞர்களின் போராட்டத்தால் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகிய நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யார் இந்த பிரகலாத் ஜோஷி?
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. பிரகலாத் ஜோஷி கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்கும் அதே வேளையில், தனது தற்போதைய பொறுப்புகளையும் தொடர்ந்து வகிப்பார். 63 வயதான பிரகலாத் ஜோஷி, கர்நாடகாவின் தார்வாட் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும், தற்போது மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராகவும், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். பிரகலாத் ஜோஷி சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார். இதற்கு முந்தைய பதவி காலத்தில், பிரதமர் மோடியின் முந்தைய அமைச்சரவையில் பிரகலாத் ஜோஷி நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராகப் பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டு முதல் கர்நாடகா மாநிலத்தின் தார்வாட் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து 5 முறை (2004, 2009, 2014, 2019, 2024) நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரகலாத் ஜோஷி. 2014-2016 வரையிலான காலகட்டங்களில் கர்நாடக பாஜகவின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்தார். கல்வித்துறையில் பல்வேறு சர்ச்சைகள், தேர்வு முறைகேடு தொடர்பான புகார்கள் எழுந்துள்ள இந்தச் சூழலில், புதிதாக பொறுப்பேற்க இருக்கும் பிரகலாத் ஷோஷி தேசிய தேர்வு முகமையை சீரமைப்பது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது, மாணவர்கள் மத்தியில் இழந்துபோன நம்பிக்கையை மீட்டெடுப்பது ஆகிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் நரேந்திர மோடி அரசாங்கத்தில் ஒரு மூத்த அமைச்சர் பதவி விலகுவது இது ஒரு அரிதான நிகழ்வாகும். அந்தவகையில் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் நாடு முழுவதும் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அவர் வகித்த துறைக்கு பொறுப்பேற்றுள்ள பிரகலாத் ஜோஷி மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.யார் இந்த பிரகலாத் ஜோஷி?
தொடர்ந்து 5 முறை எம்.பி
காத்திருக்கும் சவால்