அத்தனை சீனியர்கள் இருந்தும்.. தர்மேந்திர பிரதானுக்கு பதில் பிரகலாத் ஜோஷி ஏன்? மோடியின் முக்கிய மூவ்

  • டெல்லி: நீட் சர்ச்சை தொடர்பாக தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், பிரகலாத் ஜோஷி இப்போது கல்வி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடும் அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடியை சமாளிக்க பிரதமர் நரேந்திர மோடி தனது மிகவும் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவரை களமிறக்கியிருக்கிறார். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக நடந்த மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த முக்கிய அமைச்சகத்தை கவனித்துக் கொள்ளும் கூடுதல் பொறுப்பு மூத்த பாஜக தலைவர் பிரகலாத் ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பிரகலாத் ஜோஷி

    இப்போது நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக துறை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சராக உள்ள பிரகலாத் ஜோஷி, இனி கூடுதலாகக் கல்வி அமைச்சகத்தையும் கவனிக்கவுள்ளார். நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்களின் கவனம் கல்வி அமைச்சகத்தின் மீது குவிந்துள்ள சூழலில், அனுபவமிக்க நபரை நியமிப்பதன் மூலம் நிலைமையை விரைவாகச் சீர்படுத்த மத்திய அரசு முயல்கிறது.

    பிரகலாத் ஜோஷி நமது அண்டை மாநிலமான கர்நாடகாவை சேர்ந்தவர். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், 2004 முதல் தொடர்ந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். நாடாளுமன்ற நடைமுறைகளும் மற்றும் நிர்வாகத்தில் சிறந்த அனுபவம் கொண்டவர்.

    Advertisement

    மிக நீண்ட அனுபவம்

    2019 முதல் 2024 வரை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சராக பணியாற்றிய அவர், ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தி பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றினார். எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் அமைதியாக கையாண்டு சபையை நடத்துவதில் திறமை பெற்றவர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

    பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்கும் இந்த நேரத்தில் கல்வி அமைச்சகத்திற்கு முன் மிக பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. நீட் வினாத்தாள் லீக் விவகாரம் காரணமாக தேசிய தேர்வு முகமை மீது மாணவர்களின் நம்பிக்கை இழந்துள்ளனர்.. இதனால் தேர்வு முறையை முழுமையாக சீர்திருத்துவது, கம்யூட்டர் அடிப்படையிலான தேர்வு முறையை விரைவாக அமல்படுத்துவது, வினாத்தாள் லீக் ஆவதை தடுக்கும் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.

    Advertisement

    பொறுப்பு

    இவை அனைத்தையும் விட நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதும் புதிய அமைச்சரின் மிக முக்கிய பொறுப்பாக இருக்கும். தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதோடு மட்டுமல்லாமல்.. தேசிய கல்விக் கொள்கை, உயர்கல்வி சீர்திருத்தங்கள், திறன் மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல நீண்டகால திட்டங்களையும் தடையின்றி முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்பும் ஜோஷியிடம் போய் இருக்கிறது

    கல்வி என்பது பொது பட்டியலில் இருக்கும் துறை.! இதனால் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதிலும் அவரது அனுபவம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே அத்தனை மூத்த தலைவர்கள் இருந்தாலும், அவர்களை தாண்டி பிரகலாத் ஜோஷியை பிரதமர் மோடி டிக் அடித்துள்ளார். கடினமான சூழல்களில் அமைதியாக செயல்பட்டு நிர்வாகத்தை நிலைநிறுத்தும் திறன் கொண்டவர் என்ற நம்பிக்கையால் தான் மோடி அவரை தேர்வு செய்துள்ளார்.

    Advertisement

    அடுத்து என்ன

    தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவால் ஏற்பட்ட அரசியல் அதிர்வை தொடர்ந்து, கல்வி அமைச்சகத்தின் செயல்பாடுகள் எந்தவித பாதிப்பும் இன்றி தொடர வேண்டும் என்பதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. அந்த பொறுப்பை நிறைவேற்றக்கூடிய அனுபவமிக்க நிர்வாகியாக பிரகலாத் ஜோஷி பார்க்கப்படுகிறார். இனி நீட் தேர்வு சீர்திருத்தங்கள், தேசிய தேர்வு முகமையின் மறுசீரமைப்பு, மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை அவர் எப்படி செய்ய போகிறார் என்பதே முக்கியமானதாக இருக்கும்.

    English Summary

    Dharmendra Pradhan resignation, Pralhad Joshi has been given additional charge of the Education Ministry (கல்வி துறைக்கு பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட காரணம்): Dharmendra Pradhan latest news in Tamil.