டெல்லி: மத்திய கேபினட் செயலாளராக உள்ள டி.வி.சோமநாதன் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடையும் நிலையில் அடுத்த கேபினட் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேபினட் செயலாளராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவரான டி.வி. சோமநாதனின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது. இவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பணி நீட்டிப்பு வேண்டாம் என பிரதமரிடம் சொல்லிவிட்டதாக தெரிகிறது.
தற்போது நீட் விவகாரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு தீர்வு காண சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என மசோதாவை இரண்டே நாளில் தயார் செய்ய உதவியவர் சோமநாதன். இவர் பணி நீட்டிப்பு வேண்டாம் என சொல்வதால் அடுத்த கேபினட் செயலாளர் யார் என்பதுகுரித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த பட்டியலில் சரண்யன் கிருஷ்ணன், கோவிந்த் மோகன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இதில் சரண்யன் தமிழர், இவர் மத்திய அரசின் முக்கியத் துறையான மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வருகிறார். ஏஐ தொடர்பாக நிறைய பணிகளையும் செய்துள்ளார். இவர் பிரதமருக்கு நெருக்கமானவர் என சொல்லப்படுகிறது. அது போல் கோவிந்த் மோகன் தற்போது உள்துறை செயலாளராக இருக்கிறார். பல இக்கட்டான தருணங்களில் மத்திய அரசுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கிய இவரும் கேபினட் செயலாளர் ரேசில் உள்ளார். அடுத்த கேபினட் செயலாளர் யார் என்பது குறித்து இந்த வார இறுதியில் தெரியவரும். 1987ஆம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன். தமிழக, மத்திய அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்திருந்தார். பொது நிதி, பொருளாதாரக் கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் 2010 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் கார்பரேட் விவகாரங்கள் துறை இணைச் செயலாளராக இருந்து வந்தார். இதைத் தொடர்ந்து 2015 - 2017ஆம் ஆண்டு வரை பிரதமர் அலுவலக இணைச் செயலாளர், கூடுதல் செயலாளராக பணியாற்றியிருந்தார். 2011- 2015 ஆம் ஆண்டு வரை உலக வங்கியின் இயக்குநராகவும் இருந்தார். தமிழகத்தில் பணியில் இருந்த போது அப்போதைய முதல்வர் கருணாநிதியின் செயலாளர், பட்ஜெட் துணைச் செயலாளர், விஜிலென்ஸ் இணை ஆணையர், மெட்ரோ குடிநீர் நிர்வாக இயக்குநர், வணிக வரித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தார். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான அதிகாரியாக உள்ள சோமநாதனின் மகள் திருமணத்திற்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடி நேரில் வந்து வாழ்த்தினார். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் சோமநாதன் ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பானது கடந்த 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதாவது சோமநாதன் மத்திய நிதித் துறை செயலாளராக இருந்த நிலையில், 33 ஆவது மத்திய அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டார். கேபினட் செயலாளர், நாட்டில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தலைவர். இந்திய அரசில் என்ன நடக்கிறது, ரா அமைப்பு, உளவுத் துறைகளின் செயல்பாடுகளை தெரிந்து வைத்திருப்பவர் ஆவார்.