சம்பளம் ஒரு மேட்டரே இல்லை.. ஒரே நேரத்தில் 100+ இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா செய்தது ஏன்! பின்னணி

  • டெல்லி: விண்வெளி துறையில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாகப் படைத்து வரும் சாதனை அனைவருக்கும் தெரியும். அங்குள்ள விஞ்ஞானிகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களில் மட்டும் இஸ்ரோவில் இருந்து சுமார் 100+ விஞ்ஞானிகள் வெளியேறி இருப்பது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

    Advertisement

    இஸ்ரோ கடந்த பல ஆண்டுகளாகவே தொடர் வெற்றிகளை படைத்து வருகிறது. சந்திரயான் தொடங்கி வெற்றி மேல் வெற்றி தான். பல சிக்கலான திட்டங்களையும் கூட இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது. இதற்கெல்லாம் பக்கபலமாக இருந்தது இஸ்ரோ விஞ்ஞானிகள் தான். ஆனால், இப்போது இஸ்ரோவுக்கு பிரச்சனையாக மாறியிருப்பதும் இதே விஞ்ஞானிகள் தான்!

    Advertisement

    100+ விஞ்ஞானிகள் ராஜினாமா

    அதாவது அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் பலரும் இஸ்ரோவில் இருந்து வெளியேறி வருகிறார்கள். இது இஸ்ரோவுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் இஸ்ரோவில் இருந்து 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ளனர் அல்லது விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    நிலைமை மோசமாகப் போய் கொண்டிருப்பதை உணர்ந்தே ககன்யான் உள்ளிட்ட முக்கிய தேசிய திட்டங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு கோரிக்கைகளை ஏற்கக் கூடாது என்றும் அவை அனைத்தும் நேரடியாக விண்வெளித் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது நிலைமையை சமாளிக்க உதவும் என்றாலும் பிரச்சனையை முழுமையாக தீர்க்காது. இந்த நேரத்தில் இந்தியாவின் விண்வெளி ஆய்வுகள் அதிகரிக்கும்போது, விஞ்ஞானிகள் ஏன் வெளியேறுகிறார்கள் என்ற கேள்வியே பிரதானமாக எழுகிறது.

    Advertisement

    தனியார் துறை தான் காரணம்!

    இதற்கு முக்கிய காரணமே இந்தியாவின் தனியார் விண்வெளி துறையின் வேகமான வளர்ச்சி தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கடந்த 2020ல் விண்வெளி துறை தனியார் பங்களிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மோஸ் என ஏகப்பட்ட நிறுவனங்கள் விண்வெளியை ஆய்வு செய்ய வந்துவிட்டன. இவை ராக்கெட்டுகள், சாட்டிலைட்கள் என பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

    இந்த நிறுவனங்கள் தான் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அதிக சம்பளம், பங்குகள், விரைவான பதவி உயர்வு மற்றும் சுதந்திரமான பணிச்சூழல் என பல வாக்குறுதிகளைக் கொடுத்து தங்கள் நிறுவனங்களில் சேர சொல்கிறார்கள்.

    Advertisement

    சவால்கள்

    அதேநேரம் பலருக்கும் பணம் மட்டும் பிரச்சனை இல்லை. அத்தோடு இஸ்ரோவுக்குள் நிலவும் சவால்களும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகின்றன. ககன்யான் சோதனை பயணம், SSLV-L1, GSLV-F17 உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை காலக்கெடுவுக்குள் முடிக்க முடியவில்லை. முக்கிய முடிவுகள் அனைத்துமே தலைமை தான் எடுக்கும் சூழல் இருப்பதாகவும் இதனால் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ஒப்புதல்கள் தாமதமாகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

    இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒவ்வொரு திட்டத்தையும் தனித்தனியாக அணுகுகிறார்கள். அந்த மாதிரியான ஒரு முறை இஸ்ரோவுக்கு தேவை. அப்போது தான் விஞ்ஞானிகள் சுதந்திரமாகச் செயல்படும். அதுதான் அவர்களை தக்கவைக்கவும் உதவும்" என்றார்.

    Advertisement

    ஏன் முக்கியம்

    இஸ்ரோவில் இப்போது மொத்த 14,600 பேர் வேலை செய்து வரும் நிலையில், அதில் 100+ விஞ்ஞானிகள் வெளியேறியது குறைவு போல தெரிந்தாலும் இவர்கள் அனைவருமே சந்திரயான்-3, ஸ்பேடெக்ஸ், ககன்யான் போன்ற திட்டங்களில் அனுபவம் பெற்ற நிபுணர்கள் என்பதே கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.. மாற்று விஞ்ஞானிகள் நியமிக்கப்பட்டாலும் கூட இவர்களின் அனுபவம் அவர்களுக்கு இருக்காது என்பதே சிக்கலாக இருக்கிறது.!

    English Summary

    More than 100 scientists have reportedly resigned ISRO in recent months(இஸ்ரோவின் பல ஆய்வாளர்கள் ராஜினாமா செய்ய காரணம் என்ன): ISRO is loosing many of their scientists.