அமித் மாளவியா பதவி பறிப்பு.. 11 ஆண்டுக்கு பின் பாஜக சமூக வலைதள தலைவர் பொறுப்பு கைநழுவியது எப்படி?

  • டெல்லி: பாஜகவின் சமூக வலைதள பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்த அமித் மாளவியாவிடம் அந்த பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. அவரது இடத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீபக் மஸ்கே நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவில் நேற்று அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் மாற்றம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அமித் மாளவியாவி பதவி இழந்ததன் பின்னணி பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    அமித் மாளவியா.. மாநில அரசியல், தேசிய அரசியலை உற்று கவனிப்போருக்கு இந்த பெயர் நன்கு தெரிந்திருக்கும். ஏனென்றால் இந்த அமித் மாளவியா தான் பாஜகவின் தகவல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்தார். கடந்த 2015ம் ஆண்டு முதல் நேற்று வரை 11 ஆண்டுகளாக யாராலும் அசைக்க முடியாத அளவில் அந்த பதவியிலேயே செயல்பட்டு வந்தார்.

    Advertisement

    ஒவ்வொரு மாநிலங்களிலும் நடக்கும் சம்பவங்கள் பற்றி பாஜகவின் நிலைப்பாடு, எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்வது என்பது எப்போதும் வலைதள பக்கத்தில் பிஸியாக வலம் வந்தவர் தான் அமித் மாளவியா. பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். இப்படியான சூழலில் தான் நேற்று அமித் மாளவியாவிடம் பாஜக தகவல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

    பாஜகவில் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் செயல்பட்டு வருகிறார். இவர் தனக்கு ஏற்ப பாஜகவில் தேசிய அளவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்தார். அந்த வகையில் பலரிடம் பொறுப்புகள் பறிக்கப்பட்டு புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் ஒருவர் தான் அமித் மாளவியா. இவரிடம் இருந்து பாஜகவின் தகவல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவின் தலைவர் பதவி பறிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீபக் மஸ்கே வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அமித் மாளவியாவின் பதவி நீக்கம் தொடர்பாக தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், பிற எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்துக்கு சரியான வகையில் பதிலடி கொடுக்கவில்லை. இதில் அமித் மாளவியா தலைமையிலான டீம் தோல்வியடைந்துவிட்டதாகவும், இதனால் தான் அவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆனால் உண்மையில் வேறு விஷயம் உள்ளது. அமித் மாளவியா பாஜகவின் சமூக வலைதள பிரிவின் தலைவராக மட்டும் செயல்படவில்லை. அவர் மேற்கு வங்க மாநிலத்தின் இணை பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இதனால் அமித் மாளவியா ஏற்கனவே தன்னை பாஜகவின் சமூக வலைதள பிரிவின் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பலமறை கூறியுள்ளார். கடந்த 2019, 2024 நாடாளுமன்ற தேர்தல்களின்போதும் இந்த கோரிக்கையை முன்வைத்தாராம். ஆனால் நடக்கவில்லை.

    Advertisement

    தற்போது நிதின் நபின் பாஜகவின் தலைவரான நிலையில் அவரிடம் தன்னை பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வேறு முக்கியமான பொறுப்பு வழங்க நிதின் நிபின் நினைத்தார். ஆனால் அவரது ஜாதி, மற்றும் அவர் சார்ந்த மாநிலத்தால் தற்போது வேறு பொறுப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமித் மாளவியா பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.

    ஆனால் தற்போது நிதின் நபின் தலைமையிலான பாஜகவில் ஸ்மிருதி இரானி (பிறந்தது டெல்லியானாலும் அரசியல் உத்தர பிரதேசத்தில் செய்கிறார்), ஹரிஷ் திவேதி ஆகியோர் கட்சியின் பொது செயலாளர்களாவும், ரேகா சர்மா, தாரிக் மன்சூர் துணை தலைவர்களாகவும், அமர்பால் மவுரியா பிற்படுத்தப்பட்ட பிரிவின் தலைவராகவும், ககுன்வார் பசித் அலி சிறுபான்மையினர் பிரிவின் தலைவராகம், சிவபிரகாஷ் இணை பொது செயலாளர் (அமைப்பு) உள்ளிட்ட பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்படி உத்தர பிரதேசத்தை சேர்ந்த பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அமித் மாளவியாவிற்கு தற்போது பதவி கொடுக்கவில்லை. இருப்பினும் அவருக்கு விரைவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    குறிப்பாக அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அமித் மாளவியாவும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அந்த தேர்தலில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது அமித் மாளவியாவிடம் இருந்து பாஜக சமூக வலைதள பிரிவின் தலைவர் பதவி பறிக்கப்பட்டாலும் கூட அவர் மேற்கு வங்க மாநில பாஜகவின் இணை பொறுப்பாளராக மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Amit Malviya has been removed from his role as the head of the BJP's social media wing. Deepak Maske, hailing from Chhattisgarh, has been appointed in his place. Following organizational reshuffles within the BJP yesterday, key details have emerged regarding the circumstances behind Amit Malviya losing his position.