மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவா? - திருச்சி சிவா பேட்டி!


  • டெல்லி: மத்திய பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் திமுக ஆதரிக்குமா என்பது தொடர்பாக திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.

    Advertisement

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குவதை முன்னிட்டு டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பிக்கள் டிஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர். அனைத்து கட்சி கூட்டம் முடிவடைந்த பின்னர் பேட்டியளித்த கேரளாவின் புரட்சிகர சோசலிஸ் கட்சியின் எம்.பி. பிரேமச்சந்திரன், "துரதிருஷ்டவசமாக தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துவிட்டது" எனத் தெரிவித்தார்.

    Advertisement

    இந்நிலையில் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், "தொகுதி மறுவரையறை மசோதா குறித்து மத்திய அரசு இதுவரை எவ்வித தெளிவான திட்டத்தையும் முன்வைக்கவில்ல. தென் மாநிலங்களின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவைப் பொறுத்தவரை தற்போது உள்ள தொகுதி எண்ணிக்கையின் படி பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை திமுக ஆதரிக்கிறது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில், அரசின் நிலைப்பாடு குறித்து எங்களுக்குக் கூடுதல் தெளிவு தேவை. எங்கள் கட்சியைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது" எனத் தெரிவித்தார்.

    Advertisement

    டிஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தென் மாநிலங்களின் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், அதற்கு ஏற்பவே திமுக முடிவு எடுக்கும். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் வடிவம் என்ன என்பது பற்றி இதுவரை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. அப்படி அறிவிக்காத நிலையில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது.

    மாநிலங்களின் தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் அல்லது 50 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள்தான் செய்திகளை வெளியிடுகின்றன. மத்திய அரசு இதுபற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை. தொகுதி மறுவரையறை மசோதா பற்றி மத்திய அரசு எதுவும் சொல்லாத நிலையில் எங்கள் நிலைப்பாட்டையும் சொல்ல முடியாது. அப்படி மத்திய அரசு, விளக்கம் அளித்த பிறகு எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் சொல்வோம்.

    Advertisement

    இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை பற்றி மத்திய அரசு எதுவும் பேசவில்லை. இது குறித்து முறையான மசோதா அல்லது குறிப்புகள் வழங்கப்படாத நிலையில், அது குறித்து கருத்து சொல்வது முன்கூட்டியே முடிவெடுப்பதாகிவிடும். அரசாங்கம் மசோதாவைத் தாக்கல் செய்து, அதன் வரைவு நகல் வழங்கிய பிறகுதான் திமுக இறுதி முடிவை எடுக்கும்." எனத் தெரிவித்துள்ளனர்.

    தொகுதி மறுவரையறை மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய பாஜக அரசு நிறைவேற்ற முயன்றது. ஆனால் அப்போது மசோதாவை நிறைவேற்ற தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா தோற்கடிக்கப்பட்டது. தற்போது பல மாநிலங்களிலும் அரசியல் சூழல் மாறியுள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் பலம் கூடியுள்ளது. இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    English Summary

    Trichy Siva, the leader of the DMK's Rajya Sabha group, has clarified whether the DMK will support the BJP-led central government's constituency delimitation bill in Parliament.