தமிழக அமைச்சராகிறாரா பிரவீன் சக்கரவர்த்தி? Praveen In! ராஜேஷ், விஸ்வநாதனில் யார் அவுட்?

  • டெல்லி: தவெக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராகியிருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி தமிழகத்தின் அமைச்சராக போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரவீன் தமிழக அரசியலில் ஈடுபடுவதையே முதல்வர் விஜய்யும், விரும்புகிறாராம்.

    Advertisement

    தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பிலிருந்து தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என விரும்பியவர்களில் முக்கியமானவர் பிரவீன் சக்கரவர்த்தி. இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்.

    Advertisement

    தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ராகுலிடம் வலியுறுத்திக் கொண்டே வந்தார். ஆனால் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் விருப்பப்படி திமுகவுடனே காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

    அதில் கடைசியாக தொகுதி பங்கீட்டு பிரச்சினையை கூட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலையிட்டு தீர்த்து வைத்தார். அதன் பிறகுதான் திமுக- காங்கிரஸ் இடையே ஒப்பந்தமே கையெழுத்தானது.

    இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வென்றது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு கொடுத்த காங்கிரஸ் தற்போது தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது.

    Advertisement

    அதாவது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு அமைச்சர்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய இருவர் அமைச்சர்களாக உள்ளனர். அதிலும் விஸ்வநாதன் முக்கிய துறையான உயர்கல்வித் துறை கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை பெற்றுவிட்ட நிலையில் தற்போது தவெகவிடமும் கேட்டு மேலும் ஒரு எம்பி பதவியை பெற்றது. தற்போது தவெக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எம்பியானவர் பிரவீன் சக்கரவர்த்தி.

    இந்த பிரவீன் சக்கரவர்த்தி, முதல்வர் விஜய்க்கும் ராகுலுக்கும் நெருக்கமானவர். தற்போது இவர் மாநிலங்களவை எம்பியாக இருக்கும் போதிலும் தமிழக அரசியலில் ஈடுபடுவதையே விரும்புகிறாராம். எம்பியாக இருப்பதைவிட எம்எல்ஏவாக இருந்தால் அமைச்சராகிவிடலாம் என ஆசைப்படுகிறாராம்.

    Advertisement

    இதற்கு ராகுல் காந்தியும் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். முதல்வர் விஜய்யும் இதைத்தான் விரும்புகிறாராம். காரணம், பிரவீன், பிலானியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். அது போல் அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றிருக்கிறார்.

    மேலும் ஐபிஎம், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருக்கிறது. அது போல் இவர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணரும் ஆவார்! இதனால்தான் இவர் தனது அமைச்சரவையில் இருந்தால் நல்லது என தமிழக முதல்வர் விஜய் விரும்புகிறார் என சொல்லப்படுகிறது.

    இதனால் தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு சட்டசபை தொகுதியில் பிரவீனை நிறுத்தலாம் என விஜய் முடிவு செய்துள்ளாராம். அவ்வாறு போட்டியிட்டு பிரவீன் வெல்லும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் இரு காங்கிரஸ் அமைச்சர்களில் ஒருவரை நீக்கிவிட்டு பிரவீனுக்கு வாய்ப்பு கொடுக்க போகிறாராம்.

    Advertisement

    ஒரு வேளை பிரவீன் அமைச்சரவையில் இடம் கிடைத்தால், அவர் பொருளாதாரம் படித்துள்ளதால் நிதித் துறை, தொழில்துறை அல்லது உயர்கல்வித் துறை உள்ளிட்ட பதவிகளில் ஒன்று கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

    அது போல் பிரவீன் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடலாம் என தெரிகிறது. மற்ற காலியாக இருக்கும் 6 தொகுதிகளில் அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை துறந்துவிட்டு வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்பதால் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கில் பிரவீனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது.

    English Summary

    Will Praveen Chakravarthy become Tamil nadu Minister? What did Vijay think of him ? Does he contest in TN Assembly byelection?