டெல்லி: 2027 ஜனவரி 1 முதல் பழைய காசோலை புத்தகங்கள் செல்லாது என்ற தகவல் முற்றிலும் தவறானது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி இருக்கிறது.
2026 டிசம்பர் 31-க்குப் பிறகு தற்போது நடைமுறையில் உள்ள காசோலை புத்தகங்கள் செல்லாது என்றும், 2027 ஜனவரி 1 முதல் புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட காசோலை புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி, தற்போது பயன்பாட்டில் உள்ள Cheque Truncation System (CTS) காசோலை புத்தகங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விளக்கத்தில், 2027 ஜனவரி 1 முதல் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய காசோலை புத்தகங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. எனவே, பழைய காசோலை புத்தகங்கள் 2026 டிசம்பர் 31-க்குப் பிறகு செல்லாது என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது என்றும், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடியது என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் தந்துள்ளது. மேலும், வங்கிச் சேவைகள் மற்றும் காசோலை தொடர்பான விதிமுறைகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. பொதுவாக சமூக வலைதளங்களில் கார்டு வடிவில் வருவதை மக்கள் பலர் உண்மை என்றே நம்புகிறார்கள். ஆனால் இன்றை தொழில்நுட்பத்தில் அச்சு மாறாமல் கூட போலியான கார்டுகளை உருவாக்க முடியும். அப்படித்தான்இந்த வதந்தியும் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது. காசோலைகளில் பயன்படுத்தப்படும் Cheque Truncation System (CTS) என்ற தொழில்நுட்பம் பலருக்கும் தெரியாத மற்றும் புரியதா ஒன்று. எனவே மக்களிடம் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் என்று கூறி நம்ப வைத்து ஏமாற்றி உள்ளார்கள். அதேபோல டிசம்பர் 31, 2026-க்குப் பிறகு பழைய காசோலைகள் செல்லாது என்றும், ஜனவரி 1, 2027 முதல் புதிய காசோலைகள் கட்டாயம் என்றும் ரிசர்வ் வங்கி கூறுவது போல் போலி பதிவுகள் அதிக அளவில் பரவியதால், மக்களும் நம்பகமான அறிவிப்பு என்றே நம்பி விட்டனர். இதனால் காசோலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அச்சப்பட்டு அவர்களும் பகிர தொடங்கி உள்ளனர். இதுவே இந்த வதந்தி வேகமாக பரவ காரணமாக இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி, காசோலை தொர்பாக பரவுவது வதந்தி என்று கூறி, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.