தர்மபுரி: காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. கூட்டணிக்கு பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது. கூட்டணியின் பெயரை அறிவித்து, இடைத்தேர்தலை ஒன்றாக சந்திக்கவுள்ளனர். தவெக சமூகநீதியை முன்னிறுத்தினாலும் அதேநேரத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ரூ.1,200 கோடியில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவு சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து கூட்டணியில் உள்ள அமைச்சர் வன்னியரசு விளக்கமளித்துள்ளார்.
தர்மபுரியில் அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "புதிய தலைமைச் செயலகம் குறித்து சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் தலைமைச் செயலகம் வெவ்வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்தில் கூட இப்போதுள்ள ஓமந்தூரார் மருத்துவமனையை தலைமைச் செயலகமாக கட்டப்பட்டது. அம்மையார் ஜெயலலிதா காலத்திலும் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். அப்போதும் பல்வேறு எதிர்ப்புகள் இருந்தன. பிறகு கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு எந்த செயல்பாடும் இல்லை. இந்தமுறை அதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஒத்த கருத்துகளுடன் அனைவரும் இணைந்துதான் அதை கட்ட வேண்டியுள்ளது. மீனவ மக்களின் கோரிக்கையை பரிசீலிப்பதும் முக்கியமானது தான். எல்லாரும் கலந்து பேசி முடிவு செய்யப்படும். முதலமைச்சர் விஜய் நல்ல முடிவை அறிவிப்பார். தமிழகம் மட்டும் இந்தியா முழுவதுமே பாஜக ஆர்எஸ்எஸ் இல்லாத இந்தியா இது தான் விடுதலை சிறுத்தைகளின் இலக்கு. விசிக இடம்பெற்றுள்ள அணி தான் பாஜக, ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு அணி. விசிக உள்ள அணி தான் இடதுசாரிகள் அணி. அந்த வகையில் விசிக தற்போது தவெக, மதிமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல் அணியுடன் சேர்ந்து, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. கடந்த காலங்களில் எப்படி பாஜக, ஆர்எஸ்எஸ் எதிர்ப்பை முன்வைத்தோமா, அதுதான் இந்த கூட்டணி அமைய முக்கிய காரணம். தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதுதான் விசிகவின் இலக்கு. அந்த இலக்கை நடைமுறைப்படுத்தி வருகிறோம். வரும் நாட்களிலும் அது தொடரும். எங்களுக்கு எந்த இயக்கம் மீது காழ்ப்போ, வெறுப்போ இல்லை. சனாதனத்தை, பாசிசத்தை எந்த கட்சி எடுக்கிறார்களோ அவர்களை எதிர்ப்போம். புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் அதை எதிர்க்கிறோம். அந்த வழியில் பாஜக, ஆர்எஸ்எஸ் சனாதனத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது. அதற்கு எதிராக இந்த அணி வெற்றி கூட்டணியாக உருவாகியுள்ளது. சமூகநீதியை காக்கும் அணியாக, மதச்சார்பற்ற கொள்கையில் இருப்பதை தெளிவுபடுத்துகிறோம்" என்றார்.கடந்த காலங்களிலும்
காழ்ப்பு இல்லை