தமிழகத்தில் ஜாதி ரீதியிலான ஊர்களின் பெயர்ளை நீக்க நடவடிக்கை.. அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு

  • தர்மபுரி: தமிழகத்தில் சாதி ரீதியிலான ஊர்களின் பெயர்களை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனச் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் சக்கிலிப்பட்டி, பறையப்பட்டி உட்படப் பல்வேறு கிராமங்களின் பெயர்கள் சாதிகளைக் குறிப்பிடும் பெயர்களாக உள்ளன. தமிழக அரசு சாதி ரீதியான ஊர்களின் பெயர்களை நீக்க ஏற்கனவே அரசாணை வெளியிட்டு, அப்பணிகள் நடைமுறையில் உள்ளதாகவும் வன்னியரசு கூறினார்.

    Advertisement

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மரவாடி கிராமத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கி.கோவேந்தன் அவர்களின் தாயார் குள்ளம்மாளின் படத்திறப்பு விழா நடைபெற்றது.

    Advertisement

    இந்த விழாவில் பங்கேற்ற தமிழகச் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களிடம் கூறுகையில்: "தருமபுரி மாவட்டத்தில் சக்கிலிப்பட்டி, பறையப்பட்டி உட்படப் பல்வேறு கிராமங்களின் பெயர்கள் சாதிகளைக் குறிப்பிடும் பெயர்களாக உள்ளன. தமிழக அரசு சாதி ரீதியான ஊர்களின் பெயர்களை நீக்க ஏற்கனவே அரசாணை வெளியிட்டு, அப்பெயர்களை நீக்கும் பணிகள் நடைமுறையில் உள்ளன. ஆனால், சாதி ரீதியான பெயர்களை நீக்குவதில் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் உள்ளன. தொடர்ந்து, படிப்படியாக இந்த ஊர்களின் பெயர்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

    தாராபுரம், மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தவெக வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க இடதுசாரிகள் எடுக்கும் முடிவுகளை ஒட்டி விசிக முடிவெடுக்கும் என, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். இடதுசாரிகள் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் விசிக எடுக்கும் என அர்த்தம் கிடையாது.

    Advertisement

    எங்களுக் கென்று தனிக் கட்சி, கொடி, கொள்கைகள் உள்ளன. இடதுசாரிகள் எடுக்கும் முடிவுகளை விசிக பின்பற்றும் என எங்கள் தலைவர் எப்போதும் சொல்லவில்லை. அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட விசிகவும் ஓர் இடதுசாரிக் கட்சிதான்" இவ்வாறு வன்னியரசு கூறினார்.

    சாதிப் பெயர்களை நீக்கும் நடவடிக்கை சரியானதுதான்: சென்னை உயர் நீதிமன்றம்!

    தமிழகத்தில் தெருக்கள், குடியிருப்புகள், நீர்நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் நடவடிக்கை சரியானதுதான் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த வாரம் அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

    சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில்: "தமிழகத்தில் உள்ள சாலைகள், தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், நீர்நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கத் தமிழக அரசு உத்தரவிட்டதில் தவறில்லை. செங்கல்பட்டில் உள்ள ஹரிஜன் காலனி 'திருவள்ளுவர் காலனி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

    Advertisement

    திருவள்ளுவர் ஒரு புகழ்பெற்ற சான்றோர் என்பதை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது. அவருடைய பெயரைச் சேர்ப்பது அந்த குறிப்பிட்ட காலனியில் உள்ள தனிநபர்களின் பெருமையை மட்டுமே அதிகரிக்கும். அவரை எந்தவொரு அரசியல் கட்சியுடனோ அல்லது இயக்கத்துடனோ நாம் தொடர்புபடுத்த முடியாது. இதேபோல், இருளர் காலனி 'கபிலர் தெரு' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கபிலர் என்பது ஒரு புகழ்பெற்ற புலவரின் பெயர். 'தலைவையாளன் காலனி', 'ரோஜா நகர்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மலரின் பெயரைக் குறிக்கிறது.

    அருந்ததியர் தெருவானது 'காமராஜர் நகர்' என்றும், நரிக்குறவர் காலனியானது 'பேரறிஞர் அண்ணா தெரு' என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள். இவர்களது பெயர்களை மாற்றுப் பெயர்களாக வைப்பதில் எந்தவிதமான பிரச்சனையும் இருக்க முடியாது.

    Advertisement

    வேலூரில் உள்ள ஆதிதிராவிடர் காலனி 'கம்பர் தெரு' என்றும், திருநெல்வேலியில் உள்ள ஸ்ரீபார் காலனி 'பாரதிதாசன் தெரு' என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கவிஞர்களின் பெயர்களே தவிர, தனிநபர்களின் பெயர்கள் அல்ல.

    காஞ்சிபுரத்தில் உள்ள அருந்ததியர் குடியிருப்பு 'அவ்வையார் குடியிருப்பு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் மீண்டும் குறிப்பிடப்பட்ட பெயர்களின் மீது எந்தவித சர்ச்சையோ அல்லது தகராறோ எழுப்ப முடியாது.

    பல இடங்களில் கக்கன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மறைந்த அமைச்சர் கக்கன் நேர்மை, எளிமை மற்றும் பொதுவாழ்வில் ஒழுக்கக் கொள்கைகளை உயர்த்தியதற்காக மிகவும் மதிக்கப்படுபவர் என்பது அனைவரும் அறிந்ததே.

    Advertisement

    எனவே, சூட்டப்பட்டுள்ள மாற்றுப் பெயர்கள் அனைத்தும், மாநிலத்தில் உள்ள பொதுமக்களால் மதிக்கப்படும் நடுநிலையான பெயர்கள் என்பது தெரிகிறது.

    செங்கல்பட்டில் உள்ள வண்ணார் ஏரி, 'கொன்றை ஏரி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சாதிப் பெயர்களை வெளிப்படையாகப் பேசக்கூட முடியாது; அவை பிறரை அவமதிக்கும் வகையில் உள்ளன. எனவே, அவை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. மேலும், இந்த நடவடிக்கை பல ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

    இந்த மாற்றங்களை அறிமுகப்படுத்த அரசு இத்தனை ஆண்டுகள் காத்திருந்திருக்கக் கூடாது. பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டிய சாதிப் பெயர்களைக் கண்டறிந்து, விடுபட்ட பகுதிகளின் பெயர்களில் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் மேலும் ஓர் அரசாணையை வெளியிடுமாறு அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

    இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை; மேலும் இது அரசால் தொடரப்பட வேண்டும். சாதிப் பெயர்களை நீக்குவதால் குழப்பம் ஏற்படும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. மனதளவில் சாதிப் பெயர்களைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர்களின் மனதில் மட்டுமே குழப்பம் இருக்கும்.

    ஆனால், மனதிலிருந்து சாதியை நீக்கியவர்களின் மனதில் எந்தக் குழப்பமும் இருக்காது. இந்த நடவடிக்கையில் காலப்போக்கில் எந்தச் சிரமமும் இருக்காது. இந்த அரசாணை சமூகநீதி மாற்றத்திற்கு மிகவும் பொருத்தமானது. எனவே, அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ரத்து செய்யப்பட்டு, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

    English Summary

    Minister for Social Justice Vanni Arasu has stated that the government will take steps to remove caste-based names of villages in Tamil Nadu.