தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் மாற்றம்.. 5 கி.மீ தள்ளி போனது ஏன்? 5 கோடி அரசு லாபம் எங்கே? அன்புமணி சுளீர்

  • தர்மபுரி: தர்மபுரி நகரில் பொதுமக்களின் நலனை முற்றிலுமாகப் புறக்கணித்து, ஒரு தனியார் நிறுவனத்தின் லாபத்திற்காக நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அன்புமணியின் இந்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும்பட்சத்தில் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?

    Advertisement

    மூத்த தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், "தர்மபுரி நகரின் மையப்பகுதியில் 1978ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தவிடாமல், அனைத்துப் பேருந்துகளும் நகருக்கு வெளியே ஏ. ரெட்டிஅள்ளி பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

    Advertisement

    பாமக அன்புமணி ராமதாஸ்

    இதனால் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நகருக்குச் செல்ல பொதுமக்கள் கூடுதல் பயண நேரம் மற்றும் ரூ.20 முதல் ரூ.100 வரை கூடுதல் செலவு செய்ய வேண்டிய துயரமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய கூட்டுச் சதி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம், தனது நிலங்களின் மதிப்பை பல மடங்கு உயர்த்தும் நோக்கத்தில், 10 ஏக்கர் நிலத்தைக் கொடையாக வழங்கி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இதற்காக முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சர்களும், அதிகாரிகளும் கைமாறாகப் பெரும் தொகை பெற்றுக்கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளாட்சியில் பதவியில் அமர்த்தி இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.

    Advertisement

    தர்மபுரி பஸ் ஸ்டாண்டு விவகாரம்

    மேலும் பழைய பேருந்து நிலையம் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5.5 கோடி வருவாய் கிடைத்து வந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்தை நிர்வகிக்கும் தனியார் நிறுவனத்திற்கு அரசு சலுகை அளித்து, ஆண்டுக்கு ரூ.55 லட்சம் மட்டுமே வருவாயாகப் பெறும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வகையில் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட ஊழலாகும்.

    இதுபோன்ற முறைகேடுகள் தருமபுரியில் மட்டுமின்றி, ராசிபுரம், ரிஷிவந்தியம், கும்பகோணம் உள்ளிட்ட பல நகரங்களிலும் நடைபெற்றுள்ளது. திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான நிலங்களின் மதிப்பை உயர்த்துவதற்காகவே மக்கள் நலனை அடகு வைத்து பேருந்து நிலையங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    தர்மபுரி பேருந்து நிலைய ஊழல்

    எனவே, தர்மபுரி பேருந்து நிலைய ஊழல் மற்றும் பிற நகரங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அவர்களை அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும், தருமபுரி மாவட்ட மக்களின் துயரைப் போக்க, அனைத்து பேருந்துகளையும் மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், பொதுமக்களைத் திரட்டி பாட்டாளி மக்கள் கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும்" என்று டாக்டர் அன்புமணி எச்சரித்துள்ளார்.

    தர்மபுரி மக்களுக்கு நன்மைகள் - வசதிகள்

    ஒருவேளை இந்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றினால் அதன்மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.. ஏனென்றால், தர்மபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் பேருந்துகளை இயக்குவது என்பது வெறும் போக்குவரத்து மாற்றம் மட்டுமல்ல, அது தருமபுரி மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மீட்கும் மிக முக்கியமான நடவடிக்கையாகும்.

    Advertisement

    இதன் மூலம் நகரின் மையப்பகுதிக்கு அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், நோயாளிகள் மற்றும் தொழிலாளர்களின் தேவையற்ற பயணச் செலவும் நேர விரயமும் தடுக்கப்படுவதுடன், நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கும் உள்ளூர் வணிகம் மீண்டும் புத்துயிர் பெற்று ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

    முக்கியமாக, தனியார் நிறுவனத்திற்குச் சாதகமான இந்தத் திட்டத்தால் அரசுக்கு ஏற்பட்டு வரும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு தடுக்கப்பட்டு, நிர்வாகத் திறமையின்மை மற்றும் முறைகேடுகள் சரிசெய்யப்பட்டு, ஒட்டுமொத்த தருமபுரி நகரமும் மீண்டும் பொருளாதார வளர்ச்சியையும் பொதுமக்களுக்கான எளிமையான போக்குவரத்து வசதியையும் பெற வழிவகை செய்யும். பாமக தலைவரின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா???

    English Summary

    Dharmapuri Bus Stand Shift Sparks Debate!.. 5 km Relocation Raises Questions Over ₹5 Crore Revenue Benefit, Anbumani Slams Move