சென்னை: வியட்நாமில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தமிழர்கள் 10 பேர் உள்பட மொத்தம் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதில் பல உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த தொழில் அதிபர் செந்தில் குமாரும் உயிரிழந்தார். தனது பிறந்தாள் அன்றே அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்று நினைத்து வியட்நாமில் சுற்றுலா சென்ற செந்தில் குமார் இப்படி நாம் செல்லும் படகே நமக்கு எமனாகும் என நினைத்திருக்கமாட்டார்.. அவர் அங்கு படகு விபத்தில் உயிரிழக்கும் நிலையில், தர்மபுரியில் அவரது உறவினர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
வியட்நாமில் நடந்த படகு விபத்தில் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த தொழிலதிபர் செந்தில் குமார் என்பவரும் உயிரிழந்தார். செல்போன் டீலராக இருந்த இவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரங்கள் தயாரிக்கும் பணியினையும் செய்து வந்தார். தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பில் உறுப்பினராக இருந்த செந்தில்குமார் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். நேற்று பிறந்த நாள் என்பதால் செந்தில் குமாருக்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் செல்போன் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர். செந்தில் குமாரின் சொந்த ஊரான தர்மபுரியிலும் அவரது பிறந்தநாளை தர்மபுரியில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைகள் இல்லத்தில் கொண்டாடும் வகையில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. பிறந்த நாள் அதுவுமாக மகிழ்ச்சியாக, சந்தோஷமாக வியட்நாமில் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில் அவர் படகு விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. செந்தில் குமார் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானதாக வந்த தகவலை கேட்டு தர்மபுரியில் உறவினர்கள், நண்பர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். இதே போன்று திண்டுக்கலை சேர்ந்த முருகபிரபு இந்த படகு விபத்தில் உயிரிழந்தார். வியட்நாமில் சுற்றுலா சென்ற இடங்களில் எடுத்த படங்களை வாட்ஸ்-அப்பில் 'ஸ்டேட்டஸ்' வைத்த சில மணி நேரங்களிலேயே முருகபிரபு மறைந்தார். அழகிய கடற்கரைகள் மற்றும் தீவுக்கூட்டங்களை கொண்ட வியட்நாமிற்கு சுற்றுலாவிற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் செல்கின்றனர். தென் சீனக்கடலில் தாய்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள இந்நாட்டில், தாய்லாந்தைப் போன்றே சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். பாறைகளுடன் கூடிய வெண்மணல் கடற்கரைகள், செழுமையான பவளப்பாறைகள், கண்கவர் தீவுக்கூட்டங்களால் நிறைந்த சொர்க்கபுரியாக வியட்நாம் திகழ்கிறது. இந்த நிலையில் தான் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வியட்நாமுக்கு சுற்றுலாவுக்காக சென்றிருந்தனர். வியட்நாமை சேர்ந்த 'திரீலேண்ட்' என்ற நிறுவனம் உள்ளூர் ஒருங்கிணைப்பு நிறுவனமான சாய் வியட்நாம் மூலம் இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தது. மொத்தம் 32 பேர் நேற்று அன் தோய் தீவுக்கூட்டங்களில் படகு சவாரி சென்றனர். அதிவேக படகில் மேலும் 4 பேர் இருந்தனர். மொத்தம் 36 பேர் படகு சவாரி சென்றனர். பல்வேறு தீவுக்கூட்டங்களுக்கு படகில் சென்ற அவர்கள் இறுதியாக துறைமுகம் திரும்பினர். அப்போது திடீரென பல அடிக்கு அலைகள் எழும்பின. இதனால் படகு கடலில் நிலைகொள்ள முடியாமல் தடுமாறியது. இதை பார்த்த படகில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அலறி காப்பாற்றுமாறு சத்தம் போட்டனர். அதற்குள் படகு தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் தமிழர்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீதர், ஜெயலட்சுமி உள்பட 3 பேரும், கேரளாவைச் சேர்ந்த 2 பேரும் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிப்பட்டியைச் சேர்ந்த முருகபிரபு (43), தர்மபுரியைச் சேர்ந்த செந்தில்குமார் (45), திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்த அழகுராஜன் (38), கீழகொண்டையம்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி (30), பீமநகரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (35), சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (62), திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பாபு (52), வேலூரைச் சேர்ந்த வினய்குமார் (45), ரவிசங்கர் மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய 10 பேர் உயிரிழந்தனர்.பிறந்த நாளில் இறந்த சோகம்
வியட்நாம் படகு விபத்து
தமிழகத்தை சேர்ந்தவர்கள்