சித்தப்பா, அப்பா செய்ற காரியமா இது.. காஸ்ட்லி வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மகளுக்காக.. தர்மபுரியில் திடுக்

  • தர்மபுரி: தர்மபுரியில் கடந்த 9-ம் தேதி நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் மாறவில்லை.. ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில், பகலில் வீடுகளை நோட்டமிட்டு, செல்போனில் வீடியோ எடுத்து, இரவில் காரில் சென்று கைவரிசை காட்டியதாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இதில் கைதானவர்கள் யார் யார் தெரியுமா? இவர்களை எப்படி போலீசார் கைது செய்தனர் என்பதுதான் தற்போது வெளிவந்துள்ள தர்மபுரி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

    Advertisement

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வந்தன..

    Advertisement

    குறிப்பாக, ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் வீடுகளை குறிவைத்து இந்தச் சம்பவங்கள் நடந்ததால், அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.. இதையடுத்து காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், அந்தப் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்..

    தர்மபுரி வாகன சோதனை

    இந்த சூழலில்தான், கடந்த 9-ம் தேதி இரவு காரிமங்கலத்தில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஹோண்டா காரை நிறுத்தி சோதனை செய்தனர்.. காருக்குள் 2 ஆண்கள், 2 இளம்பெண்கள் இருந்தனர்.. மேலும், கேஸ் சிலிண்டர், ஸ்டவ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களும் இருந்தன..

    Advertisement

    போலீசார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டபோது, 4 பேரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்லியிருக்கிறார்கள்.. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்..

    கிருஷ்ணகிரி குடும்பம்

    அப்போதுதான் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கோட்டைவாசல் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (42), அவரது தம்பி சந்தோஷ் (40), ஆனந்தின் மகள் யசோதா (19), யசோதாவின் தோழியான ஜவளகிரியைச் சேர்ந்த வெண்ணிலா (22) என்பது தெரியவந்தது.. யசோதா பி.எஸ்சி. 3ம் 0ஆண்டு படித்து வருகிறார்.. வெண்ணிலா பாலக்கோடு அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்துள்ளார்..

    Advertisement

    ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற 2 பெண்களும் ஆசைப்பட்டுள்ளார்கள்.. இதற்காக எளிதில் பணத்தை அள்ள வேண்டும் என்றும் பேராசை பட்டுள்ளனர்.. இதற்காக யசோதாவின் அப்பாவும், சித்தப்பாவும் உடந்தையாக இருந்துள்ளனர்..

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மகள்

    பணத்தை கொள்ளையடிக்க, அப்பா, சித்தப்பா, மகள், மகளின் தோழி என 4 பேரும் ஒன்று சேர்ந்து, காரிமங்கலம் அருகே சொட்டாண்டஹள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள்.. செகண்ட் ஹேண்டில் வாங்கிய ஹோண்டா காரில் பகல் நேரங்களில் கிராமம் கிராமமாகச் சென்று, ஆள் இல்லாத வீடுகள், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வருகிறார்களாம்..

    Advertisement

    எந்த வீடுகளில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கிறது என்பதைப் பார்த்து, அவற்றை செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்து வைத்து கொள்வார்களாம்.. பிறகு நைட் நேரத்தில் அதே காரில் அந்த வீடுகளுக்குச் சென்று திருட்டில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்..

    அப்பா, சித்தப்பா, மகள் என காரில் செல்வதால், குடும்பத்தினர் செல்வதுபோல இருந்துள்ளது.. இதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. இதனால் திருட்டு சம்பவத்தை ஈஸியாகவே நடத்தியிருக்கிறார்கள்.. அனுமந்தபுரம், பிக்கனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் நடந்த சம்பவங்களில் இவர்கள் 4 பேருமே கைவரிசையை காட்டியிருக்கிறார்கள்.

    4 பேருமே கைது

    ஏற்கனவே சிசிடிவி பதிவுகளில் சந்தேகத்துக்குரிய கார் பதிவாகியிருந்த நிலையில், வாகனச் சோதனையின்போது அதேபோன்ற காரில் வந்த 4 பேரும் போலீசாரிடம் சிக்கி விட்டார்கள்..

    அவர்களிடமிருந்து சுமார் ஒன்றரை பவுன், அதாவது 12 கிராம் தங்க நகை, ரூ.40,000 ரொக்கம், பித்தளைப் பாத்திரங்கள், குத்துவிளக்குகள், டி.வி., காஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய கார் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்..

    இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி ஜெயிலில் சிறையில் அடைத்தனர்.. தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது..

    Advertisement

    அதிர்ச்சியில் தர்மபுரி

    கல்லூரிக்கு சென்று படித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டிய வயதில், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளனர் 2 இளம் பெண்கள்.. இந்த விபரீத ஆசையை கேள்விப்பட்டு அப்பாவும், சித்தப்பாவும் கண்டிக்காமல், மாறாக உதவி செய்ய முன்வந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது..

    வாழ்க்கையில், உழைக்காமல் எதுவுமே கிடைக்காது என்பதைத்தான் இந்த சம்பவம் மறுபடியும் உணர்த்தியுள்ளது...!!