தர்மபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் புலிக்கரை கிராமங்களில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோடலம் மன், செல்லியம்மன், ஈஸ்வரன், பெருமாள்சாமி, திருமலைத் தேவர் போன்ற கோயில்களுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வார காலத்தில் அகற்ற அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருத் தொண்டர் அறக்கட்டளையின் தலைவரான சேலம் ஏ.ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் கோயில் நில ஆக்கிரமிப்புகள் தொடர்பாக தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் புலிக்கரை கிராமங்களில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோடலம் மன், செல்லியம்மன், ஈஸ்வரன், பெருமாள்சாமி, திருமலைத் தேவர் போன்ற கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள நிலங்கள் உள்ளன. இந்த சொத்துகள் சரியாக பராமரிக்கப்படாமல் தனியார் ஆக்கிரமிப்பில் நீண்ட காலமாக இருந்து வருகிறது..
ஆக்கிரமிக்கஞ கோயில் நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் கட்டப்பட்டு, முறைகேடாக வாடகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அறநிலையத்துறை அதிகாரிகளும் இதை கண்டுகொள்வது கிடையாது. இதுதொடர்பாக புகார் அளித்தாலும் சிவில் பிரச்சனை எனக்கூறி காவல்துறையினரும் தலையிடுவதில்லை. இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு முதல் மனுக்கள் அளித்தும் அறநிலையத்துறையும், தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறி யிருந்தார். இந்த மனு சென்னை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான திருத் தொண்டர் அறக்கட்டளையின் தலைவரான சேலம் ஏ.ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ''தர்மபுரி மாவட்ட கோயில்களுக்கு சொந்தமான சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்க இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல வணிக நிறுவனங்கள் குத்தகைத் தொகையையும், வாடகையையும் கொடுக்காமல் கோயில் சொத்துகளை சொந்தம் கொண்டாடி வருகின்றன'' என்றார். அதற்கு இந்து அறநிலையத்துறை தரப்பில் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வார காலத்துக்குள் அகற்றி, அந்த நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.