தருமபுரி: முழுமையாக தவெக அரசு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யாது. அப்படி நிறைவு செய்தாலும் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் 20 லட்சம் கோடியாக அதிகரிக்கும் எனவும், இந்த ஆட்சி விபத்தில் வந்த ஆட்சி. அந்தக் கட்சிக்கு எந்த கொள்கையும் கிடையாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி மிகக் கடுமையா விமர்சித்துள்ளார்.
தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,800 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல்வேறு மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,800 பேர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அதிமுக கட்சி துண்டுகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அவர்களை கட்சியில் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக எப்போதும் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்ட கட்சியாக செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இரண்டு முறை விவசாயிகளுக்கு சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடும் நிதி பற்றாக்குறை இருந்தபோதிலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி அதிமுக ஆட்சி நல்லாட்சியை வழங்கியது. தற்போதைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 120 நாட்களிலேயே 28 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. ஏற்கனவே தமிழகம் 10 லட்சம் கோடி கடன் சுமையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடைபெற்றால், மேலும் 10 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கும் நிலை ஏற்படும். அரசு வாங்கும் கடனுக்கான சுமையை இறுதியில் பொதுமக்களே ஏற்க வேண்டிய நிலை உருவாகும். தற்போதைய ஆட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்றும், மக்கள் நலனை முன்னிறுத்தி அதிமுக தொடர்ந்து வலுவாக செயல்படும். விபத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது தவெக. ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். இந்த கட்சிதான் மக்கள் பிரச்சினையை பேசி வருகிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழக ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை. முன்னரே சொன்னது போல இந்த ஆட்சியாளர் கடன் தான் அதிகரிக்கும். தமிழகத்திலேயே வலிமையான இயக்கம் அதிமுக. இந்த ஆட்சியில் தான் அதிமுக ஆட்சியில் தான் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டது என்பதை மறந்து விடக்கூடாது. முழுமையாக இந்த அரசு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யாது. அப்படி நிறைவு செய்தாலும் பத்து லட்சம் கோடி ரூபாய் கடன் 20 லட்சம் கோடியாக அதிகரிக்கும். இந்த ஆட்சி விபத்தில் வந்த ஆட்சி. அந்தக் கட்சிக்கு எந்த கொள்கையும் கிடையாது. ஆனால் அந்த கட்சி ஆட்சிக்கு வரும் என யாரும் நினைக்கவும் இல்லை" என்றார்.எடப்பாடி பழனிசாமி
அதிமுக
கடன் சுமை
தவெக ஆட்சி
விபத்தில் வந்த ஆட்சி