சல்லடை போட்ட CBCID..சீனுக்குள் வந்த புதிய கேரக்டர்! பழனி கோவில் வழக்கில் ட்விஸ்ட்.. அன்வர்தீன் யார்?

  • திண்டுக்கல்: ​பழனி முருகன் கோயில் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கு தொடர்பாகச் சிபிசிஐடி போலீசார் கடந்த 16-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த நிலையில், 14-வது நாள் விசாரணையில் மிக முக்கியத் திருப்புமுனையாக 3 பேரை கைது செய்துள்ளனர். இதில் இதுவரை வழக்கில் பெயர் வெளிவராத அன்வர்தீன் என்ற புதிய நபர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட 1.40 ஏக்கர் மடத்து நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து அபகரிக்க முயற்சி நடந்தது.

    Advertisement

    உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, இந்த மடத்து நிலத்திற்கான 'தக்கார்' கோயில் செயல் அலுவலர் அல்லது இணை ஆணையர் தான் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். ​இருப்பினும், அனைத்து விதிமுறைகளையும் புறக்கணித்து, போலி வாரிசு மற்றும் உரிமை ஆவணங்களைக் கொண்டு அவசர அவசரமாகப் பத்திரப்பதிவு அரங்கேற்றப்பட்டதாகப் புகார் எழுந்தது.

    பழனி கோவில் நில மோசடி

    இச்சம்பவம் தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, வழக்கை விசாரணை செய்ய மாநில அரசு சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணையைக் கையில் எடுத்து, கடந்த ஜூலை 16-ஆம் தேதி 4 முக்கிய நபர்கள் மீது அதிகாரப்பூர்வமாக முதற்கட்ட வழக்கைப் பதிவு செய்தனர்.

    Advertisement

    ஜஸ்டின் மணிகண்டன்

    அதில், ​நிலத்தை விற்றதாகக் கூறப்படும் விழுப்புரம் முருகதாஸ், ​நிலத்தை வாங்கிய திருப்பூரைச் சேர்ந்த வெள்ளைத்துரை, ​நிலத்தை வாங்கிய பழனியைச் சேர்ந்த சேதுபதி, ​நீதிமன்ற உத்தரவையும் கோயில் நிர்வாக ஆட்சேபனையையும் புறக்கணித்துப் பத்திரப்பதிவு செய்ததாகப் பணி இடைநீக்கம் (Suspension) செய்யப்பட்ட (கூடுதல் பொறுப்பு பழனி) சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்.

    சிபிசிஐடி

    தொடர்ந்து 14 நாட்களாகப் பழனி சார்பதிவாளர் அலுவலகக் கோப்புகள், கணினித் தரவுகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்த சிபிசிஐடி போலீசார், இன்று (29-07-2026) வழக்கில் தொடர்புடைய 3 முக்கிய பேரை கைது செய்துள்ளனர். ​

    Advertisement

    நில அபகரிப்பு

    வெள்ளைத்துரை (60): காளிமுத்து என்பவரின் மகன்; திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, பப்பன்குளம் பகுதியைச் சேர்ந்தவர். (முறைகேடான நிலத்தை வாங்கியவர்). ​முருகதாஸ் (56): தண்டபாணி அய்யா என்பவரின் மகன்; விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு, காமராஜர் நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர். (கோயில் நிலத்தைத் தனது பெயரில் ஆவணம் செய்து விற்றவர்). ​அன்வர்தீன் (65): சாகுல் ஹமீது என்பவரின் மகன்; திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, கவுண்டன்குளம், ஏ.சி.சி. சாலை பகுதியைச் சேர்ந்தவர்

    அன்வர்தீன்

    இன்றைய கைதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதுவரை வழக்கு விவரங்களிலோ அல்லது காவல்துறை விசாரணையிலோ பெயர் அடிபடாத பழனியைச் சேர்ந்த அன்வர்தீன் என்பவரைக் கைது செய்திருப்பதுதான். இவர் நில மோசடிக்குப் போலி ஆவணங்களைத் தயார் செய்யவும், அதிகாரிகளுக்கும் நிலத் திமிங்கலங்களுக்கும் இடையே இடைத்தரகராகச் (Broker/Mediator) செயல்பட்டுப் பத்திரப் பதிவை முடித்துக் கொடுக்கப் பின்னணியில் இருந்து இயங்கியதாகச் சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.

    Advertisement

    வழக்குப்பதிவு

    நிலத்தை வாங்கியதாக கூறப்படும் மற்றொரு நபரான பழநி டி.கே.என்., புதூரைச் சேர்ந்த சேதுபதி விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. ​சுமத்தப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் (BNS Sections): கைது செய்யப்பட்டுள்ள 3 நபர்கள் மீதும் புதிய பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் பின்வரும் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ​

    வழக்குகள் என்னென்ன?

    BNS 318(4): ஏமாற்றுதல் மற்றும் சொத்தைச் சட்டவிரோதமாகப் பறித்தல் (Cheating). ​BNS 336(3) & 340(2): போலி ஆவணங்களைப் புனைந்து தயாரித்தல் மற்றும் அவற்றைப் பயன்படுத்துதல் (Forgery & Using Forged Documents). BNS 49 & 61(2): குற்றச் சதித் திட்டம் தீட்டுதல் மற்றும் சட்டவிரோதச் செயலுக்கு உடந்தையாக இருத்தல் (Criminal Conspiracy & Abetment).

    Advertisement

    அதிகாரிகள் யார் யார்?

    இவ்வழக்கில் 4-வது எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், உயர்நீதிமன்றத்தை அணுகி நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் வரும் 3ஆம் தேதி வரை தினந்தோறும் சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகிக் கையெழுத்திட்டு, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். ​கைது செய்யப்பட்டுள்ள 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்கச் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. இந்த விசாரணையின் மூலம் நில மோசடியின் பின்னணியில் உள்ள உயர்மட்டப் புள்ளிகள் மற்றும் அரசு அதிகாரிகள் யார் யார் என்ற கூடுதல் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    CB-CID arrested three accused, including new suspect Anwardheen, in the ₹100 crore Palani temple land fraud investigation.