கம்யூனிஸ்ட்களை கணக்கெடுங்க..தாசில்தாரோடு விட மாட்டோம்! அடுத்து செங்கோட்டையன் தான்! தோழர்கள் கொதிப்பு

  • திண்டுக்கல்: குஜிலியம்பாறை வட்டாட்சியர் அனுப்பிய சுற்றறிக்கை தொடர்பாக 15 நாட்களில் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. நாங்கள் தெரியாமல் கேட்கிறோம், யாரிடம் இந்த பூச்சாண்டி வேலையை தமிழ்நாட்டினுடைய வருவாய்த்துறை அமைச்சர் அல்லது தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது? எனவும், இந்தப் பிரச்சினை வட்டாட்சியரோடு நிக்கப் போகிறதா, அமைச்சர் செங்கோட்டையன் மீதான பிரச்சினையாக மாறப் போகிறதா என்பதை தமிழக அரசாங்கத்தின் நடவடிக்கை தான் தீர்மானிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

    Advertisement

    இடதுசாரி இயக்க மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை தடுக்கும் வகையில், அரசு கல்லூரிகளுக்கு உத்தரவிட்ட ஜனநாயக விரோதச் செயலைக் கண்டித்தும், கம்யூனிஸ்ட் கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்தோடு கணக்கெடுக்க உத்தரவிட்ட தலைமை செயலாளரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Advertisement

    மேலும், குஜிலியம்பாறை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார்.

    சு.வெங்கடேசன்

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன்," கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி டெல்லியில் வினாத்தால் கசிவு, நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை டெல்லியிலே முன்னெடுத்தார்கள். நாடாளுமன்றத்தை நோக்கிய போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அந்த போராட்டம் டெல்லி அரசாங்கத்தை நடுநடுங்க வைத்தது.

    Advertisement

    மாணவர்கள் போராட்டம்

    அந்த போராட்டத்தினுடைய தொடர்ச்சியாக ஜூலை 24-ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழகங்கள் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டனர். அந்த சுற்றறிக்கையானது, மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது, மாணவர்கள் ஜந்தர் மந்தர் பகுதிக்குள் போகக்கூடாது, மாணவர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்தல் செய்து ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார்கள்.

    தலைமைச் செயலாளர்

    அதனுடைய நீட்சியாக ஜூலை 28-ஆம் தேதி தமிழ்நாட்டினுடைய தலைமைச் செயலாளர் நடத்திய சட்ட ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில், டெல்லி பல்கலைக்கழகங்கள் சுற்றறிக்கை என்ன சுற்றறிக்கை அனுப்பியதோ, அந்த சுற்றறிக்கை வாசகங்கள் அப்படியே தமிழக தலைமைச் செயலாளர் நடத்திய கூட்டத்தினுடைய முடிவாக மாற்றப்பட்டது.

    Advertisement

    மோடி அமித்ஷா

    டெல்லி பல்கலைக்கழகம் இந்த உத்தரவை பிறப்பித்ததற்கு பின்னணியில் இருப்பது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்; மோடியும் அமித்ஷாவும். மோடியும் அமித்ஷாவினுடைய கருத்தை டெல்லி பல்கலைக்கழகம் உத்தரவாக பிறப்பித்தது. டெல்லி பல்கலைக்கழகம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரின் உத்தரவாக எப்படி மாறியது? இது மிக மிக அப்பட்டமான ஒரு மோசடி.

    இடதுசாரி கட்சிகள்

    தமிழ்நாட்டில் குறிப்பாக இடதுசாரி கட்சிகளுக்கு எதிராக தமிழ்நாட்டினுடைய அரசு நிர்வாகத்தை திருப்புகிற ஒரு சதி இதற்கு பின்னால் இருக்கிறது. எனவே இந்த மோசடியான, சட்டவிரோதமான இந்த உத்தரவு, உத்தரவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக அரசு தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

    Advertisement

    குஜிலியம்பாறை வட்டாட்சியர்

    குஜிலியம்பாறை வட்டாட்சியர் அனுப்பிய அந்த சுற்றறிக்கை, மார்க்சிஸ்ட் கட்சியின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய உறுப்பினர்களுடைய பெயர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கச் சொல்லி, தனக்கு கீழே இருக்கிற வருவாய் அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அந்த உத்தரவு உத்தரவு பிறப்பித்தது சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதுவும் கடந்த நான்கு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய தினம் அவரிடம் 15 நாட்கள் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. நாங்கள் தெரியாமல் கேட்கிறோம், யாரிடம் இந்த பூச்சாண்டி வேலையை தமிழ்நாட்டினுடைய வருவாய்த்துறை அமைச்சர் அல்லது தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது?

    Advertisement

    கம்யூனிஸ்ட் கட்சி

    இது விளக்கம் கேட்க வேண்டிய பிரச்சினையா? அல்லது அரசு நிர்வாகத்தை, அரசு பதவியை தவர்முறையாக பயன்படுத்திய குற்றத்திற்காக குற்றம் பதிவு செய்ய வேண்டிய பிரச்சினையா? இது விளக்கம் கேட்க வேண்டிய பிரச்சினை அல்ல. உடனடியாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு, தனது அதிகாரத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பயன்படுத்திய குற்றத்தின் மேல் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செங்கோட்டையன்

    இதில் சமரசத்திற்கே இடமில்லை. வட்டாட்சியர் மீதான பிரச்சினையை அமைச்சர் செங்கோட்டையன் அவர் மீதான பிரச்சினையாக மாற்றப் போகிறார். இந்தப் பிரச்சினை வட்டாட்சியரோடு நிக்கப் போகிறதா, அமைச்சர் செங்கோட்டையன் மீதான பிரச்சினையாக மாறப் போகிறதா என்பதை தமிழக அரசாங்கத்தின் நடவடிக்கை தான் தீர்மானிக்கும். இப்பொழுது செய்து கொண்டிருப்பதெல்லாம் கண்துடைப்பு வேலை. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலிமையாக கண்டிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

    English Summary

    Su Venkatesan condemns action against communists in Dindigul and warns Revenue Minister Sengottaiyan over the controversial circular.