ரத்தக் காடான சாலை.. மோதி விட்டு நிற்காமல் சென்ற பால் வண்டி! 4 பிஞ்சுக் குழந்தைகள் பலியான சோகம்!

  • திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சாலையோரம் அமர்ந்திருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதிய கோர விபத்தில் 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    Advertisement

    ​திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு பகுதிக்கு அருகே இன்று பிற்பகல் பழனிச்சாமி என்பவரது மனைவி அஞ்சம்மாள் (60) ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அவருடன் உறவினர் குழந்தைகளும் அங்கு சென்று சாலையோரமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

    Advertisement

    ​அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த பால் வேன் (407 வாகனம்), கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலையோரம் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது பயங்கரமாக மோதியது.

    ​இந்த கோர விபத்தில்​யோகவர்ஷினி (11) த/பெ நாகராஜ், ​அனன்யா (6) த/பெ நாகராஜ் (யோகவர்ஷினி மற்றும் அனன்யா இருவரும் சொந்த அக்கா - தங்கை), ​தனுஸ்ரீ (5) த/பெ ஜெகதீசன், ​மோசிகரன் (6) த/பெ சின்னத்தம்பி ​ஆகிய 4 குழந்தைகளும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும், அவர்களுடன் இருந்த மூதாட்டி அஞ்சம்மாள் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். ​விபத்தை ஏற்படுத்திய பால் வேன் நிற்காமல் சென்ற நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை காவல்துறையினர், உயிரிழந்த 4 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    ​மேலும், விபத்தை ஏற்படுத்திய பால் வேனை பறிமுதல் செய்த வடமதுரை போலீசார், தப்பியோட முயன்ற வேன் ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்ப உறுப்பினர்களை சேர்ந்த 4 பிஞ்சுக் குழந்தைகள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Four children from one family died after a speeding milk van hit them near Vadamadurai in Dindigul.