நாங்க தான் கிடைச்சோமா? ரியல் எஸ்டேட் உள்குத்து..புது பஸ் ஸ்டாண்டு வருமா? வராதா? தகிக்குது திண்டுக்கல்

  • திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புறநகர் பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியிருக்கிறது. இந்த நிலையில் பேருந்து நிலையம் அந்த இடத்தில் வரக்கூடாது என ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறது. இது தொடர்பாக விசாரித்த போது ரியல் எஸ்டேட் தகராறு மற்றும் திமுக உள்குத்து பாலிடிக்ஸ் தான் பேருந்து நிலைய பணிகளை முடக்கும் முயற்சிக்கு பின்னணியாக இருப்பதாக சொல்கின்றனர் திண்டுக்கல் வாசிகள்.

    Advertisement

    திண்டுக்கல் நகராட்சி கடந்த 2016 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றளவும் மாநகராட்சியின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை.

    Advertisement

    திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போதே விசாலமான புதிய பேருந்து நிலையம் அமக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. உதாரணத்திற்கு 2016 ஆம் ஆண்டு திண்டுக்கல் போலவே மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட தஞ்சாவூரில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுவிட்டது.

    ஆனால் திண்டுக்கல் மாநகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் கட்டுவதில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது இதனால் நாள்தோறும் திண்டுக்கல் நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையே கடந்த திமுக ஆட்சியின் போது திண்டுக்கல் பைபாஸ் சாலையில் 10 ஏக்கர் நிலம் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட்டது. மேலும் இதன் கட்டுமான பணிகளுக்காக ரூபாய் 75 கோடி யை மாநகராட்சி ஒதுக்கீடு செய்தது.

    Advertisement

    இந்தப் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவக்கப்பட்ட நிலையில் தனி நபர்கள் சிலர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தடுப்பதற்கான முயற்சிகளை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக தங்களது சுய லாபத்திற்காக சில ரியல் எஸ்டேட் அதிபர்கள் பெரும் புள்ளிகள் சிலரின் பினாமிகளோடு கைகோர்த்து கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைப்பதை தடுக்கப் பார்க்கிறார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது, பேருந்து நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளப்பட்டி பகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாகும். இந்தப் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்தால் எங்களது கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும். அதேபோல தென் மற்றும் வட மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக இந்த பகுதி உள்ளதால் திண்டுக்கல் நகர் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும்.

    Advertisement

    தேசிய நெடுஞ்சாலையில் இந்த பகுதி அமைந்துள்ளதால் சேலம், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள், திருச்சி,விழுப்புரம் ,சென்னை, வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கும், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் எளிதாக பேருந்துகளை புறவழிச் சாலையிலேயே நகருக்குள் நுழையாமல் பேருந்துகளை இயக்க முடியும். மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் எளிதாக பேருந்துகளை இயக்க முடியும்.

    ஆனால் தனிப்பட்ட சிலர் தங்களின் சுய லாபத்திற்காக புதிய பேருந்து நிலையம் அமைவதை தடுத்து வருகிறார்கள். திண்டுக்கல் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய பேருந்துநிலையம் அமைவது கட்டாயம். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடமோ, அல்லது வேறு எதாவது இடமோ புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்பதே தற்போது முக்கியம்" என்கின்றனர்.

    Advertisement

    திண்டுக்கல்லில் புதிய பேருந்து நிலையம் அமையுமா? அமையாதா? என பொதுமக்கள் பெரும் குழப்பத்தில் உள்ள நிலையில், உண்மையில் புதிய பேருந்து நிலைய விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள களமிறங்கினோம். அப்போது நமக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகமாய் உள்ளன.

    தற்போது புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூறுக்கணக்கான நிலம் திண்டுக்கல்லை சேர்ந்த, தமிழகம் அறிந்த ஒரு பிரபல தொழிலதிபருக்கு சொந்தமான இடம் என்று கூறப்படுகிறது. தனக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைவதற்காக 10 ஏக்கர் நிலத்தை அந்த தொழிலதிபர் அரசுக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    அந்த தொழில் அதிபர் கொடுத்த நிலத்தில் பேருந்து நிலையம் அமைந்தால் அதைச் சுற்றியுள்ள இடங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும் என்பதால் அரசுக்கு அந்த நிலத்தை அவர் கொடுத்துள்ளதாகவும், இதற்காக திமுகவில் இருக்கும் ஒரு 'முக்கிய புள்ளிக்கு' அந்தத் தொழில் தொழிலதிபர் சில ஆஃபர்களை கொடுத்துள்ளதாகவும், அதற்கு விசுவாசமாக முக்கிய அதிகாரிகளிடம் தன் செல்வாக்கை பயன்படுத்தி அந்த திமுக புள்ளி தொழிலதிபரின் இடத்தில் பேருந்து நிலையம் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    நிலைமை இப்படி இருக்க அதே திமுகவில் இருக்கும் இரண்டு வேறு முக்கிய புள்ளிகள் இந்த பேருந்து நிலையம் குறிப்பிட்ட இடத்தில் அதாவது தொழிலதிபருக்கு சொந்தமான இடத்தில் வரக்கூடாது என்பதற்கான அனைத்து முட்டுக்கட்டைகளையும் போட்டு வருகின்றனராம். அதற்கு காரணமும் நம்மை தலை சுற்ற வைக்கிறது. அதாவது திமுகவில் இருக்கும் வேறு இரண்டு முக்கிய புள்ளிகள் ரியல் எஸ்டேட் அதிபர்களாக உள்ளனர்.

    அவர்களுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களும் புறநகர் பகுதியில் உள்ளது. தங்கள் நிலத்தின் அருகே பேருந்து நிலையம் அமைந்தால் தங்கள் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கோடிகளை அள்ளலாம் என கணக்கு போட்டு தான் தற்போது தீர்வாகியுள்ள இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிராக வழக்கு, பொதுமக்களை தூண்டி விடுதல் போன்ற பல்வேறு உள்ளடி வேலைகளை அந்த இரண்டு திமுக முக்கிய புள்ளிகளும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது, திண்டுக்கல்லில் முதல் மேயராக பொறுப்பேற்ற மருதராஜ் அவர்கள் திண்டுக்கல் நகரை சுற்றி பல்வேறு இடங்களில் பேருந்துனிலையம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்தார். அதிலும் உள்ளடி வேலைகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது முன்னாள் மேயர் தனக்கு அல்லது தனது ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடம் அருகே பேருந்து நிலையம் அமையும் என தகவல்களை கசிய விடுவதும், அந்த இடங்களை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்வதும் வழக்கமாக இருந்தது.

    இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமையும் என நம்பிய பொது மக்களும் அந்த பகுதியில் சுற்றி உள்ள இடங்களில் முதலீடு செய்தனர். பிறகு அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமையாது என அறிக்கை வரும். பிறகு வேறு ஒரு இடத்தில் ஆய்வு நடக்கும். இப்படியாக மேயராக இருந்த மருதராஜ் அவர் பதவியில் இருந்த ஐந்தாண்டுகளும் பல்வேறு இடங்களில் ஆய்வு என்ற பெயரில் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் சாதகமாக செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

    எது எப்படியோ... தமிழகதின் வடக்கு. மேற்கு மாவட்டங்களை தெற்கு மாவட்டங்களோடு இணைக்கும் முக்கிய புள்ளியாக இருக்கும் திண்டுக்கல் நகருக்கு புதிய, விசாலமான, அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டாயம். அதுதான் பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தொழிலதிபர்கள் சிலர் அரசியல் கட்சி பிரமுகர்களோடு சேர்ந்து கொண்டு பேருந்து நிலையம் அமைவதை தடுப்பது தான் வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.

    அதிமுக அரசிலும் சரி, தொடர்ந்த திமுக அரசிலும் சரி பேருந்து நிலையம் அமைவதை புலி வருது புலி வருது என்ற கதையாக பூச்சாண்டி காட்டி வந்தார்கள். தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தவெக அரசு, இந்த சர்ச்சைகளுக்கும், தொழிலதிபர்களின் சுயலாபத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, பொதுமக்களின் நலனுக்காக புதிய பேருந்து நிலையத்தை அமைக்க தடாலடி நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

    English Summary

    Fresh controversy erupts over Dindigul's proposed new bus stand as real estate interests and political rivalry dominate the debate.