2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்

  • திண்டுக்கல்: அன்பும் சகிப்புத்தன்மையும் நிறைந்திருக்க வேண்டிய குடும்ப உறவுகளுக்குள், சில நேரங்களில் மனிதர்களின் பேராசைகள் டபக்கென புகுந்து விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு பேராசையினால் எழும் எதிர்பாராத திருப்பங்களும், அதன் விளைவாக போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய பரபரப்பான விவாதங்களும் திண்டுக்கல் சம்பவத்திலும் நடந்துள்ளது.. இந்த சுவாரஸ்யமான சம்பவம் சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது.

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான சடையாண்டி. வெல்டிங் தொழில் செய்து வரும் இவருக்கு, சுமதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    Advertisement

    சடையாண்டி குடும்பம்

    இவர்களது குடும்பம் சுமூகமாகத்தான் சென்று கொண்டிருந்தது.. ஆனால் கடந்த சில மாதங்களாக சடையாண்டியின் நடவடிவக்கைகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.. எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த அவர், ரகசியமாக யாரிடமோ பேசி வந்துள்ளார். கணவரின் இந்த திடீர் செய்கையைக் கண்டு சந்தேகமடைந்த சுமதி, இதுகுறித்து அவரிடமே கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆனால், சடையாண்டியோ, அதற்கெல்லாம் முறையான பதில் அளிக்காமல் மழுப்பவே, நாளடைவில் இது இருவருக்கும் இடையே கடுமையான குடும்பத் தகராறாக உருவெடுத்துவிட்டது.

    திடீரென காணாமல் போன கணவர்

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சடையாண்டி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார்.. இதனால் பதறிய சுமதி, உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் வேறு வழியின்றி, தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சுமதி.

    Advertisement

    மனைவியின் புகாரைத் தொடர்ந்து, போலீசாரும் சடையாண்டியின் செல்போன் நம்பர், அதன் சிக்னல்களைக் கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போதுதான் போலீசாருக்கே ஷாக் தந்தார் சடையாண்டி.. அவர் எங்குமே மாயமாகவில்லையாம்..


    21 வயது பெண்ணுடன் 2வது திருமணம்

    புத்தூர் பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த 21 வயசு நாகேஷ்வரி என்ற பெண்ணுடன் தனியாகக் குடித்தனம் நடத்தி வந்தது அம்பலமானது.. அதுமட்டுமன்றி, நாகேஷ்வரியிடம் தனக்கு ஏற்கனவே கல்யாணமானதையும்,. 2 குழந்தைகள் இருப்பதையும், மொத்தமாகவே சடையாண்டி ம9றைத்து, அவரை ரகசியமாக இரண்டாவது கல்யாணமும் செய்து கொண்டுள்ளார். இந்த விபரங்கள் அனைத்தையும் சேகரித்த போலீசார், உடனடியாக முதல் மனைவி சுமதியிடம் தகவலைத் தெரிவித்தனர்.

    Advertisement

    இதையடுத்து, இந்த விவகாரத்திற்கு ஒரு தீர்வு காண்பதற்காக சடையாண்டி, அவரது 2வது மனைவி நாகேஷ்வரி மற்றும் முதல் மனைவி சுமதி ஆகிய 3 பேரையும் வடமதுரை காவல் நிலையத்திற்கு போலீசார் வரவழைத்தனர்.


    பஞ்சாயத்து செய்த போலீசார்

    போலீசார் முன்னிலையில் விசாரணையும் ஆரம்பமானது.. அப்போது சடையாண்டி போலீசாரிடம், "என் முதல் மனைவி எப்போதும் என்கூட சண்டை போட்டுட்டே இருக்கிறார். அதனால்தான் மனநிம்மதி தேடி 2வது திருமணம் செய்துகொண்டேன். இப்போது எனக்கு இரண்டு மனைவிகளுடனும் வாழ சம்மதம். சட்டம் என்ன சொன்னாலும் அதைபற்றி எனக்கு கவலையில்லை.. 2 மனைவிகளையும் என்னுடனேயே அனுப்பி வையுங்கள். 2 பேரையும் ஒரே வீட்டில் வைத்து நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன்" என்று கூலாக சொன்னார்.

    Advertisement

    இதைக் கேட்டு போலீசார் ஒரு நிமிடம் திகைத்துப் போனார்கள். அப்போது 2வது மனைவி நாகேஷ்வரியோ, "அவருக்கு ஏற்கனவே கல்யாணமான விஷயம் எனக்கு இப்போதுதான் தெரியும். இருந்தாலும் நான் அவருடன்தான் வாழ்வேன், என்னை அவருடன் அனுப்பி வையுங்கள்" என்று அடம் பிடித்தார்.

    இரு மனைவிகளும் வேண்டும்

    முதல் மனைவி சுமதியோ கண்ணீர் மல்க, "எனது 2 பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக என் கணவர் எனக்கு மட்டும்தான் வேண்டும்" என்று போலீசாரிடம் கைகூப்பி மன்றாடினார்.

    நிலைமை கையை மீறிச் செல்வதைக் கண்ட வடமதுரை போலீசார், சடையாண்டியைத் தனியாக அழைத்துச் சென்று சட்ட ரீதியாக எச்சரித்தனர். "முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். உங்கள் மனைவி புகார் அளித்தால் நீங்கள் ஜெயிலுக்கு போக நேரிடும்" என்று விளைவுகளை எடுத்துரைத்து, அட்வைஸூம் தந்தனர்.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து, 2வது மனைவி நாகேஷ்வரிக்கும் உரிய அறிவுரைகளை வழங்கி, அவரை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சடையாண்டியை அவரது முதல் மனைவி சுமதி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தி, அந்த தம்பதியை ஒன்றாக அனுப்பி வைத்தனர். இந்த விசித்திரமான சம்பவத்தால் வடமதுரை காவல் நிலைய வளாகத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது...!!

    Topics: #dindigul

    English Summary

    Dindigul Shock: Man Demands “I Want Both My Wives”… What Happened Next Left Police Stunned