திண்டுக்கல்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மழையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. எனவே, கொடைக்கானலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக வெள்ளி அருவியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அருவியை தாண்டி வாகனங்கள் மேலே வர முடியாதபடியும், மேலிருந்து கீழே இறங்கும் வாகனங்கள் கீழே இறங்க முடியாதபடியும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
மழை மேலும் நீடிக்கும் என்பதால், கொடைக்கானலுக்கு வர வேண்டாம் என்று காவல் கண்காணிப்பாளர் கூறியிருக்கிறார். இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஆங்காங்கே மண் சரிவு, மரங்கள் சாய்ந்து விழுதல் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. மேலும், கொடைக்கானலிலிருந்து அடுக்கம் வழியாகப் பெரியகுளம் செல்லும் மலைப்பாதை உள்ளிட்ட சில சாலைகளில் கனமழையின் காரணமாக மண் சரிவு மற்றும் மழைநீர் அரிப்பினால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால்,மலைப்பாதைகளில் வாகனப் போக்குவரத்திற்கும். பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். தற்போதைய வானிலை நிலவரத்தின்படி, வரும் நாட்களிலும் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் தங்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி ஆகிய மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா வருவதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், மலைப்பாதைகளில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மழையின் காரணமாக சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுதல், மண் சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தற்போதைய கனமழைச் சூழலில் கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி பகுதிகளுக்குச் சுற்றுலா வருவதைத் தவிர்த்து, காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று கோரப்பட்டிருக்கிறது.