திண்டுக்கல் கொடைரோட்டில் ஒரே நாளில் 3 கோயில்கள் இடித்து அகற்றம்.. அதிகாரிகள் நடவடிக்கை ஏன்

  • திண்டுக்கல்: பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் பொதுப்பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 3 கோயில்களை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர்.

    Advertisement

    வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் எதிரே சிறுமலை கிழக்கு தோட்டத்திற்குச் செல்லும் பொது வண்டிப்பாதை உள்ளது. இங்குச் சீலைக்காரி அம்மன், சோனை கருப்புசாமி, வீரகாளியம்மன் ஆகிய 3 சிறிய கோயில்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில்கள் பெரிதாகக் கட்டப்பட்டுப் புனிதநீராட்டு விழாவும் (கும்பாபிஷேகம்) நடத்தப்பட்டது. இதனால் நாள்தோறும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் சென்றனர்.

    Advertisement

    இந்நிலையில், இக்கோயில்கள் பொதுப்பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக அம்மையநாயக்கனூரைச் சேர்ந்த ராஜராஜ சோழன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 3 கோயில்களையும் இடித்து அகற்ற உத்தரவிட்டார்.

    பொக்லைன் எந்திரம் மூலம் இடிப்பு

    நீதிமன்ற உத்தரவின்படி, நிலக்கோட்டை வட்டாட்சியர் (தாசில்தார்) ராமசாமி, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) இளவரசி ஆகியோர் தலைமையில் 3 கோயில்களின் கட்டிடங்களும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து, கோயில்களில் இருந்த சுவாமி சிலைகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளிலும் நேற்று ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. நகரின் முக்கியச் சாலைகள் மற்றும் தெருக்களில் வியாபாரிகளும், குடியிருப்பு உரிமையாளர்களும் நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்தனர். மேலும், வணிக வளாகங்களில் வாகன நிறுத்த வசதி இல்லாததால், வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டுப் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

    இதனால் திண்டுக்கல் பிரதான சாலை, 4 ரத வீதிகள், பழனிச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

    Advertisement

    முன்னதாக ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வியாபாரிகளுக்குக் கடந்த வாரமே எச்சரிக்கை அறிவிப்பு (நோட்டீஸ்) வழங்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, காவல் துறை பாதுகாப்புடன் திண்டுக்கல் மணிக்கூண்டு முதல் அபிராமி அம்மன் கோயில் வரை பிரதான சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டதைக் கண்ட வியாபாரிகள் பலர், தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சாலை அகலமானது. இந்தப் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English Summary

    It is standard procedure for any building constructed by encroaching upon a public thoroughfare to be demolished in accordance with court orders. In line with this, the Revenue Department took action to demolish and remove three temples that were encroaching on public land in Ammayanaickanur, Dindigul district.