எமர்ஜென்சி காலமா இது? கம்யூனிஸ்டுகளை வேவு பார்க்க உத்தரவிட்ட தவெக அரசு.. யார் கொடுத்த உத்தரவு?

  • திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரி கட்சி நிர்வாகிகளின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் பிறப்பித்த சுற்றறிக்கை, தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    ஜனநாயக நாட்டில் தனிநபர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்த இந்த நடவடிக்கை, நாட்டில் 1975-ல் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக் காலத்தை (Emergency) நினைவூட்டுவதாகப் பல்வேறு தரப்பினரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

    Advertisement

    சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி என்பவர், தனது ஆளுகைக்குட்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அதில் உள்ள முக்கிய உத்தரவுகள்:

    குஜிலியம்பாறை வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் வசிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் முழு பெயர் மற்றும் வீட்டு முகவரிகளைச் சேகரிக்க வேண்டும். இந்த விவரங்களை உடனடியாகத் திரட்டி தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் (தலையாரிகள்) களப்பணியில் ஈடுபட வேண்டும்; இதில் அலட்சியம் காட்டும் ஊழியர்கள் மீது கடுமையான துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை பாயும்.

    Advertisement

    இந்த சுற்றறிக்கையின் நகல் சமூக வலைதளங்களில் கசிந்ததைத் தொடர்ந்து, அரசியல் தளத்திலும் பொதுவெளியிலும் மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

    எமர்ஜென்சி காலம் போன்ற அடக்குமுறை

    அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும், தனிநபர் சுதந்திரத்தையும் நசுக்கும் வகையில் அரசு நிர்வாகமே வேவு பார்க்கும் செயலில் இறங்கியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் பார்வையாளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். மக்களாட்சி தத்துவத்தின் கீழ் செயல்படும் ஓர் அமைப்பில், ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தைச் சார்ந்தவர்களின் விவரங்களை அதிகாரப்பூர்வமாகப் பட்டியல் தயாரித்து கண்காணிப்பது எதேச்சதிகாரத்தின் வெளிப்பாடு.

    இது எமர்ஜென்சி கால அடக்குமுறைகளுக்கு சமமானது.. எமர்ஜென்சி காலத்தில் இதே நடைமுறை இருந்தது என கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.

    Advertisement

    மேலும், மாநிலத்தை ஆளும் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு இது ஒரு மிகப்பெரிய நிர்வாகச் சறுக்கல் என்றும், உளவுத்துறையை ஏவி தோழமைக் கட்சிகளையே அரசு வேவு பார்க்கிறதா என்றும் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    யார் போட்ட உத்தரவு?

    முக்கியமாக தாசில்தார் இப்படி உத்தரவு போட யார் அனுமதி கொடுத்தது.. அவர் இப்படி உத்தரவு போட யாரவது கேட்டிருக்க வேண்டும் . அப்படி மேலிடத்தில் இருந்து தாசில்தாருக்கு உத்தரவிட்ட அந்த நபர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தற்போதைய அரசியல் சூழலில், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் அரசுக்கு முக்கிய ஆதரவு சக்திகளாக விளங்கி வருகின்றன. இத்தகைய சூழலில், அரசை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சியினரையே அதிகாரப்பூர்வமாக இலக்கு வைத்துத் தரவுகள் திரட்டப்பட்டது கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது மேலிடத்து உத்தரவின் பேரில்தான் நிர்வாகம் செயல்பட்டதா என்ற விவாதமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

    Advertisement

    தாசில்தார் சஸ்பெண்ட் - விசாரணை தீவிரம்

    விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, அரசு நிர்வாகம் உடனடியாகத் தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. விதிகளை மீறி தன்னிச்சையாக இத்தகைய சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை வெளியிட்டதாகக் கூறி, குஜிலியம்பாறை தாசில்தார் அய்யாசாமியை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாலும், இந்த உத்தரவின் பின்னணியில் உள்ள அதிகார மையம் யார் என்பதை வெளிப்படையாக விசாரிக்க வேண்டும் எனவும், வருவாய்த்துறையைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    English Summary

    Emergency-Like Surveillance in TN? Dindigul Tahsildar’s Order Profiling Communist Cadres