திண்டுக்கல்: பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல்லில் அவரது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மண் சோறு சாப்பிட்டு எச். ராஜா ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் மேற்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பாஜகவினர் இல்லை என்பதும், எச்.ராஜாவின் தனிப்பட்ட ஆதரவாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை பொறுத்தவரை அதிரடியாக அரசியல் செய்பவர்கள் மிகக் குறைவு. அவர்களில் ஒருவர் தான் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா. தற்போது தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்பு குழுவில் கன்வீனராக இருக்கிறார்.
காரைக்குடி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். 2001 இல் தமிழக பாஜகவும், திமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் சட்டமன்றம் சென்றவர். அதற்குப் பிறகு பல தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தாலும் அதிரடி அரசியலில் சற்றும் சளைக்காதவர். மிகத் தீவிர இந்துத்துவா வாதியாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் எச்.ராஜா கட்சியைத் தாண்டி பலத்த ஆதரவாளர் வட்டத்தை வைத்திருப்பவர். அதிரடியான பேச்சு, பேட்டி, அறிக்கைகள் மூலம் யாரையும் விமர்சிக்க தயங்க மாட்டார். பாஜகவினராகவே இருந்தாலும் விமர்சிக்க தயங்க மாட்டார். அதனாலேயே கட்சியைத் தாண்டி ராஜாவின் பேச்சுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதே நேரத்தில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும் வாடிக்கைதான். இந்த நிலையில் எச்.ராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல்லில் எச்.ராஜா பூரண உடல் நலத்துடன் இருக்க வேண்டுமென மண் சோறு சாப்பிட்டுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். எச்.ராஜாவின், 71வது பிறந்தநாள் முன்னிட்டு அவர் பூரண ஆரோக்கியத்துடனும், ஆயுளுடனும் நூறாண்டு காலம் வாழ வேண்டி, திண்டுக்கல்லில், அவரது ஆதரவாளர்கள் ஐயப்பன் கவுண்டர், சிவசுப்புரமணியன், பழனி கோதைமங்கலம் உள்ளிட்டோர் தாரை, தப்பட்டை முழங்க, பொய்க்கால் ஆட்டத்துடன், திண்டுக்கல் சிலுவத்தூர் ரோடு அய்யனார் கோவிலிலிருந்து காலை 7.00 மணியளவில் ஊர்வலம் புறப்பட்டு, மேட்டுராஜாக்கப்பட்டி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலை வந்தடைந்தனர். அங்கு எச்.ராஜா நூறாண்டு காலம் நோயின்றி பூரண ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சியும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. மேலும், கோவில் சுற்றுப்புறப் பிரகாரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரம் நடும் விழாவும் நடைபெற்றது. அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள் அன்று ஸ்வீட் வழங்குவது, அன்னதானம் வழங்குவது எல்லாம் வழக்கம் தான். ஆனால் பெரிய அளவில் கட்சியிலும், ஆட்சியிலும் பதவியில் இல்லாத நிலையில் எச். ராஜாவின் பிறந்தநாள் அன்று அவரது ஆதரவாளர்கள் மண் சோறு சாப்பிட்டது பாஜகவினரிடையே பேசுபொருளாக மாறி இருக்கிறது.எச். ராஜா
71வது பிறந்தநாள்
மண் சோறு வழிபாடு
தீவிர ஆதரவாளர்கள்