திண்டுக்கல்: கொடைக்கானலில் நேற்றிரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை ஒரு மணி நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால், மேலே செல்லும் மலைப்பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்திருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அச்சத்துடன் பயணித்திருக்கின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. வட கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்திருந்தது. குறிப்பாக கொடைக்கானல் பகுதியில் நேற்றிரவு தொடங்கி கனமழை தொடர்ச்சியாக பெய்து வந்தது. நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக தனியாருக்கு சொந்தமான பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 6 பைக்குகள் சேதமடைந்திருக்கின்றன. அதேபோல இன்று மாலை 1 மணி நேரத்தில் அதிக அளவில் மழை கொட்டி தீர்த்திருக்கிறது. இதனால், கொடைக்கானல் முழுவதும் வெள்ளம் பாய்ந்திருக்கிறது. வெள்ளம் காரணமாக வெள்ளி அருவியை தாண்டி வாகனங்கள் முன்னேற முடியாமல் அப்படியே பாதி வழியில் நிறுத்தப்பட்டன. கீழிறங்கும் வாகனங்களாலும் கீழே போக முடியவில்லை. அதேபோல செண்பகனூர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. மின் கம்பங்களும் சாய்ந்ததால் சுமார் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாறைகள் உருண்டதில், சாலையில் விரிசல் ஏற்பட்டதால் வாகனங்களால் பயணிக்க முடியவில்லை. சுற்றி பார்க்க வந்த பயணிகள், கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாதுகாப்பாக வீடு போய் சேருவோமா? என்று தெரியாமல் அவர்கள் அச்சமடைந்திருந்தனர். வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. அதேபோல அடுத்த 2 மணி நேரத்திற்கு.. அதாவது இரவு 10 மணி வரையிலான வானிலை எச்சரிக்கையை பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.