திண்டுக்கல்: முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்து போது கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுதது தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் அழுவதை விவாதமாக்குவதால் என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பிய விக்னேஷ், என்றும் விஜய் எங்களுக்கு தளபதி தான் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகியது. இந்தப் படத்தை தவெக தொண்டர்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் முதல் ஆளாக திரையரங்குக்கு சென்று பார்த்தனர். அதுமட்டுமல்லாமல் ஜனநாயகன் திரைப்படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே திடீரென கண்ணீர் விட்டு அழுக தொடங்கினர்.
அமைச்சார் பர்வேஸ் தொடங்கி அமைச்சர்கள் ஆனந்த், விஜய் பாலாஜி, சம்பத் குமார், விக்னேஷ் உள்ளிட்ட பலரும் கண்ணீர்விட்டு அழுதனர். கிட்டத்தட்ட நேற்றைய நாளில் அமைச்சர்கள் யாரும் தலைமைச் செயலகத்திற்கே வரவில்லை. இன்னும் 10 நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஜனநாயகன் படம் பார்த்து அமைச்சர்கள் கண்ணீர் சிந்தியது மக்களிடையே கிண்டலுக்குள்ளானது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாம் அமைச்சராக இல்லாமல் ஒரு பதில் சொல்லட்டுமா.. சிறு வயதில் இருந்து நாங்கள் விஜய் ரசிகர்கள்.. 30 ஆண்டுகளாக பார்த்து ரசித்த முகம்.. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உணர்வு இது.. கடைசியாக ஒருமுறை பார்க்கிறோம்.. எல்லோருக்குள்ளும் குழந்தைதன்மை இருக்கும். என்றும் எங்களுக்கு அவர் தளபதி தான்.. திரையில் பார்த்த முகம் பழகிய முகம்.. இனி அந்த திரையில் வர மாட்டார்.. எப்படி வீடியோ எடுத்தார்கள் என்று தெரியவில்லை. அறியாமல் வந்த கண்ணீர் தான் அது.. எந்த பிரயோஜனம் இதனை பேசுவதால் நாட்டில் என்று தெரிவித்தார். அப்போது நீட் பிரச்சனைக்காக மாணவர்கள் போராட்டம் நடத்தும் போது, அமைச்சர்கள் திரையரங்கில் விசிலடிப்பது சரியா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதனிடையே முதல்வர் விஜய் ஏற்கனவே ஜனநாயகன் திரைப்படத்தை அரசு அதிகாரிகளுடன் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்ட சூழலில், நாளை காலை 11.30 மணியளவில் மீண்டும் படக்குழுவுடன் அமர்ந்து படம் பார்க்க இருக்கிறார். இதனால் முதல்வர் விஜய் இன்னும் சினிமா துறையில் இருந்து இன்னும் முழுமையாக வெளி வரவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.