கொடைக்கானல் குலுங்குது.. இனிமேல் ‘இந்த’ வாகனங்களுக்கு தடை! சுற்றுலாப் பயணிகளுக்கு ஷாக் அறிவிப்பு!

  • திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் சுற்றுலா பயணிகள். இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கொடைக்கானலில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.

    Advertisement

    மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடக போன்ற பல்வேறு வெளிமாநிலங்களிருந்து விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவது வழக்கம்.

    Advertisement

    அவ்வாறு வருகை தரும் பயணிகள் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், ரோஜா தோட்டம், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய இடங்களில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் கூட்டமாக இயற்கை அழகை கண்டு ரசித்தும் புகைப்படங்களை எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

    மேலும் சுற்றுலாப்பயணிகள் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச் சாலையை சுற்றி சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகையால் நகர் பகுதி மற்றும் பல்வேறு சுற்றுலா தளங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Advertisement

    இதன் காரணமாக சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன. தொடர் விடுமுறை நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதனை சரி செய்ய ஆங்காங்கே கூடுதலான போக்குவரத்துக் காவலர்களை பணியமறுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும், வால்வோ போன்ற பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகள் மொத்தமாக வருவதாலும் சில இடங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கொடைக்கானலில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் 1989, விதி 370, பிரிவு 1-ன்கீழ் மண்டலப் போக்குவரத்து அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி 01.12.2026 முதல் 12 மீட்டர் நீளத்திற்கும் அதிகமாக உள்ள Volvo போன்ற பயணியர் வாகனம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனம் ஆகியவை திண்டுக்கல் மாவட்டத்தில், காட்ரோடு முதல் கொடைக்கானல் செல்லும் சாலை, அய்யம்பாளையம் - சித்தரேவு - தாண்டிக்குடி வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை. தருமத்துப்பட்டி - பன்றிமலை - மணலூர் - தாண்டிக்குடி வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை, ஒட்டன்சத்திரம் - பாச்சலூர் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை. பழனி - சவரிக்காடு - வடகவுஞ்சி வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை, பெரியகுளம் கும்பக்கரை பிரிவு - அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை ஆகிய சாலையில் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

    Advertisement

    எனவே, மேற்கண்ட இடங்கள் வழியாக கொடைக்கானல் செல்வதற்கு 12 மீட்டர் நீளத்திற்கு அதிகமாக உள்ள Volvo போன்ற பயணியர் வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களை பயன்படுத்தாமல் 12 மீட்டர் நீளத்திற்கும் குறைவான நீளமுள்ள பயணியர் மற்றும் சரக்கு வாகனங்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்தலாம்" என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Dindigul Collector restricts vehicles over 12 metres, including Volvo buses and goods carriers, on six Kodaikanal routes from December 1, 2026.