கொடைக்கானல் காட்டில் மரிய வில்சன்.. அங்கே கருஞ்சிறுத்தை! சர்ச், படகு.. சடன் வரவால் அசந்த திண்டுக்கல்

  • திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் என்றாலே ஜாலி டூர், குளிர், மலை, ஏரி என நினைவுக்கு வரும். ஆனால் இந்த முறை கொடைக்கானலுக்கு சென்ற நிதி அமைச்சர் மரிய வில்சனின் பயணம் கொஞ்சம் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. முதலில் வனப்பகுதிக்குள் ஆய்வு.. அடுத்து சர்ச்.. பிறகு குடும்பத்துடன் படகு சவாரி.. கடைசியில் பொதுமக்களின் முக்கியமான பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார். இப்படி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளார் மரிய வில்சன்.. அப்படி என்ன நடந்தது?

    Advertisement

    கொடைக்கானலுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார் நிதியமைச்சர்.. பூம்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வேம்படி சிகரத்தில் உள்ள வேட்டை தடுப்பு முகாமுக்கு அமைச்சர் மரிய வில்சன் நேரில் சென்றார். அங்கு வனத்துறையினர் பயன்படுத்தி வரும் வயர்லெஸ் ரிப்பீட்டர் சாதனங்கள், சோலார் மின்வசதி போன்றவற்றை பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    Advertisement

    கொடைக்கானல் காடு

    அதுமட்டுமல்லாமல், வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த ஆட்டோமெட்டிக் கேமராக்களையும் ஆய்வு செய்தார். அப்போதுதான், மிகவும் அரிதாக தென்படும் கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. அந்தக் காட்சிகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டார். உடனே வனத்துறை அதிகாரிகளிடம், அரிய வன உயிரினங்களை பாதுகாப்பதற்கும், கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்துவதற்கும் அறிவுறுத்தினார்.

    இதன்பிறகு அமைச்சர் மரிய வில்சனின் பயணம் வேறு ஒரு பக்கம் திரும்பியது. கொடைக்கானலில் புகழ்பெற்ற புனித சலேத் அன்னை சர்ச்சுக்கு குடும்பத்துடன் சென்ற அவர், அங்கு சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரியும் செய்தார்.

    Advertisement

    நிதியமைச்சர் மரிய வில்சன்

    குடும்பத்துடன் நேரம் செலவிட்டுவிட்டு, பொதுமக்களிடம் பேசியபோது, கொடைக்கானலின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது கடந்த 5 ஆண்டுகளாக சாலைகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இதைக் கேட்ட அமைச்சர், "5 வருசமா எதுவுமே இல்ல.. கொடைக்கானல்ல ரோடு மோசமா இருக்கு.. தண்ணீரும் தட்டுப்பாடா இருக்கு.. இதை முதலமைச்சர் விஜய் கவனத்துக்கு கண்டிப்பா கொண்டுபோவேன்" என்று உறுதி தெரிவித்துள்ளார்.

    குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல்

    இதையடுத்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் 2.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தின் பணிகளைப் பார்வையிட்ட மரிய வில்சன், அந்த வளாகத்திற்கு செல்லும் அணுகுசாலைப் பணிகள் அரைகுறையாக இருப்பதை சுட்டிக்காட்டி, இன்னும் 2 மாதங்களுக்குள் சாலைப் பணிகளை முடித்து, புதிய கட்டிடத்தை விரைவாக மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    Advertisement

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசும்போது, கடந்த 4 வருடங்களாகவே கொடைக்கானலில் உள்கட்டமைப்புப் பணிகள் எதுவுமே திருப்திகரமாக நடைபெறவில்லை, இப்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரிடமும், பூட்டப்பட்டுள்ள பேரிஜம் ஏரி சுற்றுலாத் தளத்தைத் திறப்பது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சரிடமும் பேசப்போகிறேன்.

    முதலமைச்சர் விஜய்

    அதுமட்டுமல்ல, நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கூடுதல் பார்க்கிங் பகுதிகளை அமைக்க காலியாக உள்ள நிலங்களை அடையாளம் காண உத்தரவிட்டுள்ளேன்.. மேற்கண்ட பிரச்சனைகளில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் அறிக்கையாகத் தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன்" என்றார்.

    Advertisement

    அமைச்சரின் இந்த நம்பிக்கை வார்த்தைகள் கொடைக்கானல் மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தந்துள்ளது.. எனினும், மரிய வில்சன் ஏன் இப்படி கொடைக்கானல் பிரச்சனைகளை நேரடியாக கையில் எடுத்திருக்கிறார்? திடீரென இந்த விசிட்டுக்கு காரணம் தெரியவில்லை.

    சடன் விசிட் திண்டுக்கல் சர்ப்ரைஸ்

    இந்த விசிட், நிர்வாக ரீதியானதாக இருக்கலாம் என்கிறார்கள்.. கொடைக்கானல் தமிழகத்தின் முக்கியமான சுற்றுலா நகரம். இங்கு சாலை வசதி, குடிநீர் போன்ற அடிப்படை விஷயங்களில் பிரச்சனை நீடித்தால், அது உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளையும் பாதிக்கும். நிதி அமைச்சராக இருப்பதால் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் அவரது துறைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.

    Advertisement

    அதேபோல இது ஒரு புதிய அரசின் தொடக்ககால நடவடிக்கை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். புதிய நிர்வாகம் வந்திருக்கும்போது, முக்கிய சுற்றுலாத் தலங்களில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனைகளை நேரில் சென்று கேட்பது, "மக்கள் சொல்வதை கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்போம்" என்ற நிர்வாக அணுகுமுறையை காட்டும் வாய்ப்பாகவும் இருக்கலாம்.

    அந்தவகையில், கொடைக்கானலில் அமைச்சர் மரிய வில்சனின் பயணம் வெறும் வன ஆய்வு, சர்ச் பிரார்த்தனை, குடும்பத்துடன் படகு சவாரி என்று மட்டுமே முடிந்துவிடவில்லை. காட்டில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் முதல் நகர மக்களின் அடிப்படை பிரச்சனைகள் வரை கையிலெடுத்துள்ளது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது..!!!

    English Summary

    Kodaikanal Forest Visit by Mari Wilson.. Black Panther Spotted, Church, Boat Ride.. Why the Sudden Inspection in Dindigul?