கார்களிலும் டூவீலர்களிலும் உரசியபடி ஆட்டம்.. கொடைக்கானலில் மக்களை அலறவிட்ட பிரம்மாண்ட காட்டெருமை

  • திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைக்கானல் மற்றும் பெரும்பாறை சுற்றியுள்ள மலைக் கிராமங்களில், உணவும் தண்ணீரும் தேடி வனப்பகுதியை விட்டு காட்டெருமைகள் கிராமங்களுக்குள் ஊடுருவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்றைய தினமும் ஒரு காட்டெருமை அங்குள்ள பொதுமக்களுக்கு ஆட்டம் காட்டி விட்டது.. என்ன நடந்தது?

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கீழ்மலைப் பகுதிகளில், அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகளின் நடமாட்டம், நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.. இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

    Advertisement

    நகர்ப் பகுதிகள் மட்டுமல்ல, மலைக்கிராமங்களுக்குள்ளும் கூட்டம் கூட்டமாக காட்டெருமைகள் உலா வருகின்றன.. அத்துடன் பொதுமக்களையும், விவசாயிகளின் கால்நடைகளையும் தாக்குவதும், குடியிருப்புப் பகுதிகளை அச்சுறுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    கொடைக்கானல் மக்கள் அலறல்

    சமீபத்தில்கூட, கொடைக்கானல் நகரின் மிக முக்கியமான குடியிருப்புப் பகுதியான "பியர் சோலா'" பகுதியில் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக முகாமிடுவதை வழக்கமாக கொண்டிருந்தன. பகலும் இந்த காட்டெருமைகள் முகாமிட்டு விட்டது.. அதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அளவுக்கு அதிகமான இன்னலுக்கு ஆளானார்கள்.

    தங்களது வேலைக்கு செல்ல முடியாமலும், மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பாதுகாப்பாக வீடு திரும்பவும் முடியாமலும் அவஸ்தைப்பட்டனர்..அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாகவே, பியர் சோலா பகுதியில் முகாமிடும் காட்டெருமைகளைக கட்டுப்படுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை அப்பகுதி மக்களிடையே எழுந்தது.

    Advertisement

    திண்டுக்கல் மலைகிராமங்கள்

    இப்படிப்பட்ட சூழலில், கீழ்மலைக் கிராமங்களிலும் காட்டெருமைகளின் தொந்தரவு மறுபடியும் தீவிரமடைந்துள்ளது.. குறிப்பாக மங்களம்கொம்பு, தாண்டிக்குடி, பெரும்பாறை, கானல்காடு, கே.சி.பட்டி மற்றும் குப்பம்மாள்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் காட்டு யானைகள் மற்றும் காட்டெருமைகளின் ஊடுருவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த பகுதி மக்கள் உறைந்துபோயுள்ளனர்.

    அதுவும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் நிலையில், வனப்பகுதிக்குள் உள்ள நீர்நிலைகள் வற்றிப்போயுள்ளன. இதன் காரணமாக, உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுது வாடிக்கையாகிவிட்டது.

    மஞ்சள்பரப்பு கிராமத்தில் காட்டெருமை

    இதன் தொடர்ச்சியாக, பெரும்பாறை அருகே அமைந்துள்ள மஞ்சள்பரப்பு கிராமத்திற்குள் நேற்று திடீரென பெரிய காட்டெருமை ஒன்று புகுந்து விட்டது.. அந்த கிராமத்தின் முக்கியச் சாலைகளில் ஹாயாகவும் உலா வரத் தொடங்கியது... அதுமட்டுமல்ல, சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், டூ வீலர்களில் உரசியபடி சென்றதை பார்த்து கிராம மக்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு, தங்களது வீடுகளுக்குள்ளும் கட்டிடங்களுக்குள்ளும் தஞ்சம் புகுந்தனர்..

    Advertisement

    பார்ப்பதற்கு சாது போல அந்த காட்டெருமை காணப்பட்டாலும், எந்த நேரத்தில் தாக்கும் என்று தெரியாததால், பொதுமக்கள் பயந்து நடுங்கினார்கள்.. எனினும், சில இளைஞர்கள் காட்டெருமையின் இந்த நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் போட்டோக்கள், வீடியோக்களை எடுத்தனர்.. அதற்குள் அங்கிருந்தவர்கள், அந்த இளைஞர்களை எச்சரித்து தடுத்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கை

    சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மஞ்சள்பரப்பு கிராமத்தையே பீதியில் ஆழ்த்திய அந்த காட்டெருமை, மறுபடியும் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.. அதற்கு பிறகுமதான் கிராம மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

    மலைக் கிராமங்கள் மற்றும் குடியிருப்புப பகுதிகளில் வனவிலங்குகள் தொடர்ந்து புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதோடு உயிர் பயத்தையும் ஏற்படுத்தி வருவதால், வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், சிறப்பு ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்...!!

    English Summary

    Wild Gaur Brings Kodaikanal Manjalparappu to a Standstill for an Hour, Panic in Dindigul Hill Village