செஞ்சுரி அடிச்சாச்சு.. யாரு வாஷிங்டன் சுந்தரா? இல்லைங்க.. வெங்காயம் தான்! வேதனையைக் கிளப்பும் விலை!

  • திண்டுக்கல்: வரத்து குறைவின் காரணமாக சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. மழை இல்லாத காரணத்தினால் இனி வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் இல்லத்தரசிகள் திட்டமிட்டு பட்ஜெட் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சர்க்கரை விலை உயர்ந்திருக்கும் நிலையில், வெங்காயமும் மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது.

    Advertisement

    திண்டுக்கல்- கரூர் பைபாஸ் சாலையில் தமிழகத்தில் இரண்டாவது பெரிய வெங்காய மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    சின்ன வெங்காயம் திண்டுக்கல் அருகே உள்ள கள்ளிமந்தயம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விளைவிக்கப்படுகிறது, இங்கு விளைவிக்கப்படும் வெங்காயம் திண்டுக்கல் ஒருங்கிணைந்த வெங்காய மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு தமிழக மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    வெங்காயம் விலை

    இதற்கிடையே போதிய மழை இல்லாத காரணத்தினால் உள்ளூர் வெங்காய வரத்து முற்றிலும் தடைபட்டு விட்டது. உடுமலைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் சின்ன வெங்காயத்தை நேரடியாக வியாபாரிகளிடம் விலையும் இடத்திலேயே வாங்கி விடுவதால் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு வரத்து பல மடங்கு குறைந்துவிட்டது. 50 கிலோ எடை கொண்ட 5000 பைகள் சராசரியாக வரும் நிலையில் தற்போது ஆயிரம் முதல் 1200 பைகள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

    Advertisement

    சின்ன வெங்காயம்

    இதனால் கடந்த வாரம் முதல் தர சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 50க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் வரத்து றைவின் காரணமாக முதல் தரம் கிலோ. ரூபாய் 100 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தரத்திற்கு ஏற்ப 10 கிலோ வெங்காயம் ரூபாய் 700 முதல் 1000 வரை சில்லறை சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.

    பெரிய வெங்காயம்

    அதேபோல மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து வரும் பெரிய வெங்காயம்
    வரத்து பல மடங்கு குறைந்த காரணத்தினால் கடந்த வாரம் 10 கிலோ பை அதிகபட்ச விலை ₹500 க்கு விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூபாய் 700க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை தற்பொழுது குறைய வாய்ப்பில்லை என்றும் மழைப்பொழிவு வெளிமாவட்ட வரத்து அதிகரித்தால் மட்டுமே வெங்காயத்தின் விலை குறையும் என வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    வரத்து குறைவு

    மழை இல்லாத காலத்திலேயே வெங்காயத்தின் வரவு குறைந்திருக்கும் நிலையில் மழை அதிகரித்தால் ஈரப்பதம் காரணமாக வெங்காயத்தின் வரத்து இன்னும் குறையும் என்கின்றனர் இதனால் வரும் காலங்களில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சர்க்கரை விலை அதிகரித்து பொதுமக்களின் பட்ஜெட்டை பதம் பார்த்து வரும் நிலையில் தற்போது வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது எனவும், உரிக்காமலேயே கண்ணீரை வர வைக்கிறது வெங்காயம் என்கின்றனர் இல்லத்தரசிகள்.

    ரேஷன் கடைகளில் வெங்காயம்

    இதனால் பார்த்து பார்த்து பட்ஜெட் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். அதே நேரத்தில் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கிலோ 35 என்ற ரூபாய்க்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெரிய வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வரும் என்றாலும், சின்ன வெங்காயத்தையும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பொதுமக்கள்.

    English Summary

    Small onion prices hit Rs 100 per kg in Dindigul as poor rainfall and reduced arrivals push prices higher, worrying households.