பலே ஆளுங்க ஜஸ்டின் மணிகண்டன்! பழனி நில மோசடி நடந்த அதே 6ஆம் தேதி.. அரசு புறம்போக்கு நிலமும் ஸ்வாஹா

  • திண்டுக்கல்: பழனி நகராட்சிக்கு சொந்தமானதாகவும், சர்க்கார் புறம்போக்கு என பட்டா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் பத்திரப்பதிவை, கோயில் நில மோசடி வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பழனி கோவிலுக்கு வழங்கப்பட்ட தண்டபாணி மடத்துக்கு சொந்தமான கோவில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வழக்கு சிபிசிஐடி வசம் சென்றுள்ளது.

    Advertisement

    இதில் தொடர்புடையதாக கருதப்படும் சேதுபதி, வெள்ளத்துரை உள்ளிட்டு நான்கு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் பழனி கோவில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட அதே நாளில் பழனி நகராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலமும் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    கடந்த 6-ம் தேதி ஜஸ்டின் மணிகண்டன் சார் பதிவாளராக பணியில் இருந்தபோது, பழனி அருகே நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது மகன் மனோஜ் குமாருக்கு சம்பந்தப்பட்ட நிலத்தை விற்பனை செய்ததாக ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 1437 என்ற பத்திர எண் உள்ள நிலையில் அதில் மேற்படி சொத்து நகராட்சி எல்லைக்குட்பட்டது என்றும் மேற்படி சொத்தின் தற்கால மதிப்பு 2 கோடியே 67 லட்சத்து 36 ஆயிரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Advertisement

    அதே நாளில், மனோஜ் குமார் அந்த நிலத்தை பாஜக பிரமுகர் சவுந்தரபாண்டி என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்ததாக மற்றொரு பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1438 என்ற அடுதடுத்த பத்திரம் எண்ணாக உள்ளது , 14 37 என்ற பத்திரத்தில் 2 கோடியே 67 லட்சத்து 36 ஆயிரம் என மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 1438 என்ற பத்திர எண்ணில் அதாவது சவுந்தரபாண்டியன் எழுதிக் கொடுத்த பத்திரத்தில் சொத்தின் தற்கால மதிப்பு 20 லட்ச ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    இந்த இரண்டு பத்திரங்களும் ஒரே நாளில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிலம் அரசு புறம்போக்கு நிலம் என பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தும், உரிய ஆவணங்களை முழுமையாக சரிபார்க்காமல் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான திருமடத்து நிலம் தொடர்பான பத்திரப்பதிவு மோசடி வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    Advertisement

    தற்போது மற்றொரு நிலம் தொடர்பான பத்திரப்பதிவு விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கடந்த 6-ம் தேதி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதில் முறைகேடுகள் அல்லது மோசடிகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பத்திரங்களை சட்டப்படி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கை

    மேலும், அரசு புறம்போக்கு நிலம் தனியார் பெயர்களுக்கு எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து பதிவுத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    English Summary

    Fresh controversy erupts as alleged ₹60 crore government poramboke land in Palani was reportedly registered by suspended sub-registrar Justin Manikandan.